காவிரி பாலத்தில் ஸ்தம்பிக்கும் டூவீலர்கள்: போக்குவரத்தை சீர்செய்ய என்ன வழி?
காவிரி மேம்பாலத்தில் இரு சக்கர வாகன போக்குவரத்தை அனுமதிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என மநீம திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான எஸ்.ஆர்.கிஷோர்குமார் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.
காவிரி மேம்பாலத்தில் இரு சக்கர வாகன போக்குவரத்தை அனுமதிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான எஸ்.ஆர்.கிஷோர்குமார் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது;
Advertisment
திருச்சியின் அடையாளங்களின் ஒன்றாக இருக்கும் திருச்சி மலைக்கோட்டையையும்-ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் காவிரி ஆற்றுப்பாலம் கட்டி 40 ஆண்டுகளாகும் நிலையில் அதன் மேற்பரப்பு சாலையில் பழுது ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், தற்பொழுது காவிரி மேம்பாலம் சீரமைக்கப்படுவது பாராட்டப்படவேண்டிய விசயம்.
அதேபோல், இரு சக்கர வாகனத்தை தவிர ஏனைய போக்குவரத்து சேவை மேற்படி காவிரி பாலத்தில் முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது வரவேற்பிற்குறியது.
ஆனால், மேற்படி காவிரி மேம்பாலத்தின் வழி அனுமதிக்கப்படும் இருசக்கர போக்குவரத்து முறைப்படுத்தபடாததால் இன்று (12.09.2022) ம் தேதி திங்கட்கிழமை வாரத்தின் முதல் நாள் அப்பாலத்தின் வழியே தங்களது குழந்தைகளுடன் பள்ளிக்கு செல்பவர்களும், அலுவலக பணிக்கு செல்பவர்களும் அனுபவித்த இன்னல்கள் சொல்லிமாலாது.
மேலும், மேற்படி காவிரி மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் திருச்சியிலிருந்து - ஸ்ரீரங்கத்திற்கும், ஸ்ரீரங்கத்திலிருந்து-திருச்சிக்கும் சென்ற வாகன ஓட்டிகள் காவிரி மேம்பாலத்தில் கிடைத்த இடத்திலெல்லாம் புகுந்து சென்றதை நம்மால் காணமுடிந்தது.
மேலும், மன்னன் படத்தில் வரும் ரஜினி - கவுண்டமணி நகைச்சுவை காட்சி போல காவிரி பாலத்தில் இந்த கரையிலிருது அந்த கரைக்கு சென்றவர்களை பார்க்கும் பொழுது செயின், மோதிரம் காமெடி தான் நினைவுக்கு வந்தது. அந்தோ மக்களின் பரிதாபநிலை.
மேலும், திருச்சி To ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கம் To திருச்சிக்கு இருசக்கர வாகனங்களில் மேற்படி மேம்பாலத்தில் செல்பவர்களுக்கு தனி தனியாக வழித்தடத்தை பேரிகாட் உள்ளிட்ட தடுப்புகளை கொண்டு அமைத்து தருவதே இந்த போக்குவரத்து நெரிசலுக்கும், சாகச பயணத்திற்கும் தீர்வாகும் என்பது பொதுமக்களின் கருத்தாகும். மேலும் நேற்று போக்குவரத்து மாற்றப்பட்ட காவிரி மேம்பால போக்குவரத்தை திருச்சி மாநகர காவல் ஆணையர் நேரில் ஆய்வு செய்ததையும் இங்கு கவனிக்கவேண்டும்.
எனவே, மரியாதைக்குறிய திருச்சி மாநகர காவல் ஆணையர் மேற்படி காவிரி மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள் செல்ல இரு வழிகளிலும் தனி தனி வழித்தடம் (எதிர்-எதிர் இல்லாமல்) அமைத்து தரவேண்டும். மேலும் மேற்படி மேம்பால பணி முடியும் வரை தினம்தோறும் காலை, மாலை நேர பீக் ஹவர்ஸ்களில் சிறப்பு உயர் காவல் அதிகாரிகளை பொறுப்பு அதிகாரிகளாக நியமிப்பதோடு, மேற்படி பீக் ஹவரஸ்களில் போக்குவரத்து போலிசாருடன், சட்டம் மற்றும் ஒழுங்கு, ஊர்காவல் படை, சிறப்பு இளைஞர் படை உள்ளிட்ட கூடுதல் போலிசாரை நியமித்து போக்குவரத்து நெரிசலை குறைக்க மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுகொள்கிறோம்.
மேற்படி, மேம்பாலத்தின் வழியாக இருசக்கர வாகன ஓட்டிகளும் திருச்சி மாநகர காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம் என்றார்.