கோவை ரயில்வே தரைப் பாலம் - இரும்பு தூண் மீது கனரக வாகனம் மோதி விபத்து
கோவையில் ரயில்வே தரை பாலத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ள உயர கட்டுப்பாட்டு இரும்புத்தூண் மீது கனரக வாகனம் மோதியது. ஆபத்தான இரும்புத் தூணை இன்றே அகற்ற வேண்டும் என கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை ரயில்வேக்கு வலியுறுத்தியது.
கோவையில் ரயில்வே தரை பாலத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ள உயர கட்டுப்பாட்டு இரும்புத்தூண் மீது கனரக வாகனம் மோதியது. ஆபத்தான இரும்புத் தூணை இன்றே அகற்ற வேண்டும் என கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை ரயில்வேக்கு வலியுறுத்தியது.
Advertisment
கர்நாடகாவில் இருந்து வந்த சிறிய கண்டெய்னர் லாரி கோவை அரசு மருத்துவமனை அருகே வரும்பொழுது ரயில்வே தரை பாலத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ள உயர கட்டுப்பாட்டு இரும்புத்தூண் மீது மோதியது.
கோவை அரசு மருத்துவமனை அருகே ரயில்வே துறைக்கு சொந்தமான தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பாலத்தின் முன்பு அதிக எடை கொண்ட உயரத்தடை இரும்புத்தூண் உள்ளது.
சமீபமாக இந்த உயரத்தடை இரும்புத்தூண் மீது கடந்த மூன்று முறைக்கு மேல் கனரக வாகனங்கள் அலட்சியமாக வந்து மோதியுள்ளது. இதனால் இந்த உயரத்தடை இரும்புத்தூண் பழுதாகி எந்த நேரத்திலும் விழும் அபாயத்திலிருந்தது.
இந்த நிலையில் இன்று மாலை பாலத்தின் முன்பு உள்ள இரும்புத்தூண் மீது தடை மீறி வந்த கனரக வாகனம் மோதியது. கர்நாடகாவில் இருந்து சாக்லேட் பொருட்களை ஏற்றி வந்து கடைவீதியில் விற்பனைக்கு கொடுத்துவிட்டு மீண்டும் கர்நாடகாவிற்கு செல்லும்போது இந்த சிறிய கண்டெய்னர் கனரக வாகனம் தூண் மீது மோதியது.
அப்போது அதிக எடை கொண்ட இரும்புத்தூண் வாகனத்தின் மீது விழுந்து அமிழ்த்தியது. இதில் வாகன ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதைத்தொடர்ந்து விரைந்து வந்த மாநகரப் போக்குவரத்து காவல்துறையினர் கோவை அரசு மருத்துவமனை அருகே இருக்கும் தரைப்பாலம் அருகே போக்குவரத்தை மாற்றினர்.
பின்னர் ஜே.சி.பி இயந்திரம் மூலம் இரும்புத்தூனை அகற்றும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். கன்டெய்னர் வாகனத்தின் மீது அமிழ்ந்து இருந்த இரும்புத்தூனை தூக்கி ஏற்கனவே இருந்த அமைப்பில் வைத்தனர். ஆனால் இரும்பு தூண் பகுதியானது பழுதாக உள்ளதால் எந்த நேரத்திலும் விழும் ஆபத்தில் உள்ளது.
இந்த நிலையில் கோவை மாநகர காவல் துறையின் போக்குவரத்து உதவி ஆணையாளர் அருள் முருகன் இன்றே ரயில்வே துறையினர் ஆபத்தான முறையில் உள்ள தூணை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையடுத்து, ரயில்வே துறையினர் தூணை அகற்றி சரி செய்யும் பணியை துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”