தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் வசித்து வந்தவர்கள் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் எனப்படும் கணேஷ், சாமிநாதன் சகோதரர்கள். இவர்கள் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி பல கோடி மோசடி செய்ததாக வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து தங்களை காப்பாற்றுவதாக கூறி போலீசார் லஞ்சம் பெற்ற சம்பவத்தில் வழக்கு பதியப்பட்டு இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த விபரம் வருமாறு;
கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சாமிநாதன். சகோதரர்களான இவர்கள் நிதி நிறுவனம் மற்றும் பால் உள்ளிட்ட பல தொழில் செய்து வந்தனர்.
முன்னாள் பா.ஜ.க பிரமுகர்களான இவர்கள் கும்பகோணம் பகுதியில், தங்களிடம் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக்கி திருப்பி தரப்படும் என நிதி நிறுவனம் நடத்தி ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர். இதை நம்பி தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலர் இவர்களிடம் பணம் முதலீடு செய்திருந்தனர்.
பலர் கோடி கணக்கில் இவர்களிடம் டெபாசிட் செய்திருந்தனர். நிதி நிறுவனத்தின் மூலம் வந்த பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்த சகோதரர்கள் தங்களுக்கு என சொந்தமாக ஹெலிகாப்டர், ஹெலிகாப்டர் இறங்கு தளம் உள்ளிட்டவை வைத்திருந்தனர். உள்ளூரை தவிர எந்த வெளியூருக்கு சென்றாலும் ஹெலிகாப்டரில் வலம் வருவது இவர்களது வழக்கம்.
ஒரு முறை தங்கள் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூட ஹெலிகாப்டரிலிருந்து பூக்களை தூவிய சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இதைதொடர்ந்து ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என்றே அனைவராலும் அழைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தங்கள் நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்தவர்களுக்கு முறையாக பணம் செலுத்தவில்லை என ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. முதலில், கும்பகோணத்தைச் சேர்ந்த ஜபருல்லா-பைரோஜ் பானு தம்பதியினர், ஹெலிகாப்டர் சகோதரர்கள் எங்களிடம் ரூ.15 கோடி மோசடி செய்துவிட்டதாக, கடந்த 2021 ஆம் ஆண்டு, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் மூலம் கிட்டதட்ட ரூ.600 கோடி வரை மோசடி செய்ததாகவும் சொல்லப்பட்டது.
மேலும், கும்பகோணத்தை சேர்ந்த ரகுபிரசாத் என்பவர் உள்ளிட்ட பலர் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மீது போலீஸில் புகார் செய்தனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமையில் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வழக்கில் இருந்து தப்பிக்க வைப்பதாக ஹெலிகாப்டர் பிரதர்ஸிடம் எஸ்.பி லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்ஜெய், அப்போது எஸ்.பி. இன்ஸ்பெக்டராக இருந்த சோமசுந்தரம், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டராக இருந்த கண்ணன் உள்ளிட்டவர்கள் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
இப்போது இந்த வழக்கின் புதிய திருப்பமாக, இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், எஸ்.ஐ. கண்ணன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் வட்டாரத்தில் பேசினோம், ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுப்பட்டது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தலைமறைவாக இருந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள், 2021 ஆம் ஆண்டு அவர்களது தாயாருக்கு சிகிச்சையளிப்பதற்காக கோவையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தனர்.
அப்போது தனிப்பிரிவு ஆய்வாளர் சோமசுந்தரம், தனிப்படை உதவி ஆய்வாளர் கண்ணன் இருவரும் கோயம்புத்தூர் சென்றதுடன் அங்கிருந்த ஹெலிகாப்டர் சகோதரர்களிடம், ரகுபிரசாத் உள்ளிட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.1 கோடியும், மற்றவர்கள் கொடுக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும், வழக்கிலிருந்து தப்பிக்க வைக்க ரூ.5 கோடி என மொத்தம் 6 கோடி ரூபாய் கேட்டுள்ளனர் என்று கூறப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இதை கேட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கு அட்வான்ஸாக ரூ.10 லட்சம் கேட்டுள்ளனர். அதில் ரூ.5 லட்சம் கொடுக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 5 லட்சம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் தங்களுடைய உதவியாளர் மூலம் கொடுத்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் வைத்து இருவரும் வாங்கியுள்ளனர்.
இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்ததில் லஞ்சம் வாங்கப்பட்டது உண்மை என கண்டறிப்பட்டுள்ளது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கு தொடர்பாக தற்போது மயிலாடுதுறை சிறப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் பந்தநல்லுார் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகவும், கண்ணன் சென்னையிலும் பணியாற்றி வருவது குறிப்பிடதக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.