ஹெல்மெட் கட்டாயம், டூ வீலரில் பயணிக்கும் இருவருக்கும்- ஐகோர்ட்

இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிவது, 4 சக்கர வாகனத்தில் செல்லும் அனைவருக்கும் சீட் பெல்ட் அணிவது அவசியமாக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதை உறுதி செய்யும் சட்டத்தை முறையாக அமல்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது காவல்துறையினர் இந்த சட்டத்தை முதலில் பின்பற்ற வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதையும், கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

இரண்டு சக்கர வாகனங்களில் எல்.இ.டி விளக்குகள் பொறுத்தப்படுவதால் இரவு நேரங்களில் பிற வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாகவும், எனவே எல்.இ.டி விளக்குகள் பொறுத்துவதை தடுக்க வேண்டும் என்றும் கூறினர். விளக்கு முகப்பில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அவ்வப்போது முறையான வாகன சோதனை நடத்தவும், அது குறித்த அறிக்கையை வரும் 27-ஆம் தேதிக்குள் தமிழக அரசு தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள் அன்றைய தினத்துக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

×Close
×Close