scorecardresearch

சி.சி.டி.வி கேமராவிற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த காவலர்.. ஏன் தெரியுமா?

கடலூரில் கொலை வழக்கில் குற்றவாளியைப் பிடிக்க உதவியாக இருந்ததாக சி.சி.டி.வி கேமராவிற்கு காவல் ஆய்வாளர் பிரசன்னா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சி.சி.டி.வி கேமராவிற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த காவலர்.. ஏன் தெரியுமா?

குற்றவாளிகளை பிடிக்க ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு வழிமுறையை தமிழ்நாடு காவல்துறையினர் பின்பற்றி வருகின்றனர். 1980-களில் குற்றவாளிகள் விட்டுச் செல்லும் பொருட்களை வைத்து துப்பு துலக்கினர். பின்னர் 1990-களில் மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். அதனைத் தொடர்ந்து 2000-ம் ஆண்டுகளில் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

மொபைல் போன்களின் பயன்பாடு 2010-களில் அதிகரித்தது. குற்றச் சம்பவங்கள் நடந்த நேரத்தில் அந்த இடத்தில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடித்தனர். நவீன காலத்திற்கு ஏற்ப இந்த முறையும் மாறியது. தமிழ்நாடு போலீசாருக்கு சமீப காலமாக சி.சி.டி.வி கேமராக்கள் பெரிதும் உதவி வருகின்றன,

குறிப்பாக 2020-க்கு பின்னர் முக்கிய சாலைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோவில்கள், திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்கள், வீடுகளின் வாசல்கள் போன்ற இடங்களில் சி.சி.டி.வி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை எளிதில் அடையாளம் காண முடிகிறது. அந்த வகையில், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ஒரு கோவிலில், அங்கு பணி செய்த அர்ச்சகரே உண்டியல் பணத்தை திருடியதை சி.சி.டி.வி கேமரா மூலம் போலீசார் கண்டறிந்தனர். மேலும், சில தினங்களுக்கு முன்னர் ஸ்டுடியோ உரிமையாளர் சுந்தரமூர்த்தி குறிஞ்சிப்பாடியில் மர்மக் கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி. மூலமாகவே, சுந்தரமூர்த்தியை கொலை செய்த கூலிப்படையை குறிஞ்சிப்பாடி போலீசார் கண்டறிந்து கைது செய்தனர்.

இப்படியான நிகழ்வுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக குறிஞ்சிப்பாடி காவல் ஆய்வாளர் பிரசன்னா, கொலையாளியை கண்டுபிடிக்க உதவியாக இருந்த சி.சி.டி.வி கேமராவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே நான் இவ்வாறு செய்கிறேன். அனைவரும் அவரவர் வீடுகளின் வாசல்களில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த வேண்டும். இதன் மூலம் குற்றச் சம்பவங்களை தடுக்க முடியும்.
குற்றவாளிகளையும் எளிதில் கண்டறிய முடியும் என்றார். குறிஞ்சிப்பாடி காவல் ஆய்வாளர் சி.சி.டி.வி கேமராவுக்கு மாலை அணிவித்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடனும், ஆர்வமுடனும் பார்த்து சென்றனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Helps to find accused cuddalore inspector pays floral respect to cctv camera

Best of Express