நடிகைகள் குறித்து இழிவாக பேசியதாக நடிகை ரோகினியின் புகாரின் பேரில், மருத்துவர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கேரளாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக ஹேமா கமிட்டி அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கேரளாவில் போலீஸ் ஐஜி தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் நிவின் பாலி உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை நடந்திருப்பதாக நடிகை ராதிகா உள்ளிட்ட சிலர் கூறினர்.
இதுதொடர்பாக, யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த மருத்துவர் காந்தராஜ், படத்தில் நடிக்கும்போது அனைத்துக்கும் ஓகே சொல்லிவிட்டு, 30 ஆண்டுகளுக்கு பிறகு புகாரளிப்பதாக நடிகைகளை விமர்சித்தார். மேலும் நடிகைகள் சிலரது பெயரையும் குறிப்பிட்டு பேசியிருந்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நடிகையும், நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவரான ரோகிணி சென்னை காவல் ஆணையரகத்தில், ஆன்லைன் வழியாக புகாரளித்தார்.
அந்த புகாரில், ’ டாக்டர் காந்தராஜ் நடிகைகளை மிகவும் கீழ்த்தரமாகவும், பாலியல் தொழிலாளி போலவும் பேசியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. மறைந்த நடிகைகள் முதல் தற்போதுள்ள நடிகைகள் பற்றி எந்தவித ஆதாரமும் இன்றி பேட்டியளித்துள்ளார். நடிகைகள் என்றால் கேமராமேன், எடிட்டர், மேக்கப் மேன், டைரக்டர் என அனைவரிடமும் அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் தான் நடித்து வருகின்றார்கள் என்பது போல பேசியிருப்பது வேதனையளிக்கும் வகையில் உள்ளது.
இதுதவிர கொச்சையான வார்த்தைகளை அவர் பயன்படுத்தி உள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு யூடியூப்பில் உள்ள அவரது பேட்டியை நீக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நடிகை ரோகினியின் புகாரின் பேரில், மருத்துவர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கேரளாவில் ஹேமா கமிட்டி போல், தமிழ்நாட்டில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சினிமாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியின் தலைவராக நடிகை ரோகிணி நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“