தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் தேர்வு அறிவிக்கைகளின் முழு விவரங்களை இனி டி.என்.பி.எஸ்.சி. இணையத்தளத்தில் மட்டுமே வெளியிட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
குரூப் 1 (துணை மாவட்ட ஆட்சியர், துணை காவல் துறை கண்காணிப்பாளர்) முதல் குரூப் 4 (கிராம நிர்வாக அலுவலர்) வரை பல்வேறு பணிகளுக்கு, ஆண்டுதோறும் டி.என்.பி.எஸ்.சி. நூற்றுக்கணக்கான தேர்வுகளை நடத்துகிறது. இந்த தேர்வு அறிக்கைகளின் முழு விவரங்களும் இரண்டு தமிழ் நாளிதழ்கள், ஒரு ஆங்கில நாளிதழிலும் வெளியிடப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்த தேர்வு அறிவிக்கைகளின் முழு விவரங்களையும் டி.என்.பி.எஸ்.சி. இணையத்தளத்தில் மட்டுமே வெளியிட வேண்டும் என தமிழக அரசு டி.என்.பி.எஸ்.சி.க்கு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர் ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு இணையத்தளத்திலேயே விண்ணப்பிக்கும் முறை கொண்டுவரப்பட்டது. இதற்காக, டி.என்.பி.எஸ்.சி. இணையத்தளம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தேர்வு அறிவிக்கைகளும் டி.என்.பி.எஸ்.சி. இணையத்தளத்தில் வெளியிடும்போது அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இதுகுறித்து விளக்கங்களை தேர்வாளர்கள் இணையத்திலேயே கேட்டு பெறுகின்றனர்.
இந்நிலையில், தேர்வு குறித்த அறிவிக்கைகளை இணையத்தளத்தில் மட்டுமே வெளியிட வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவுறுத்தப்படுகிறது. அதேசமயம், அதுகுறித்து சுருக்க குறிப்பு மட்டும் நாளிதழில் வெளியிடப்படும்”, என கூறப்பட்டுள்ளது.