ராமேஸ்வரத்தில் கடற்கரைக்கு முன்பாகவே உள்ள தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து பெண்களை வீடியோ எடுத்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடி விட்டு அங்கிருக்கும் கடைகளில் உள்ள உடை மாற்றும் அறைகளில் உடை மாற்றி விட்டு கோயிலுக்கு செல்வர்.
அந்த வகையில், புதுக்கோட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் ராமேஸ்வரம் கடற்கரைக்கு முன்பாகவே உள்ள தனியார் உடை மாற்றும் அறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ரகசிய கேமரா இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து அப்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அங்கு வந்து கடையை ஆய்வு செய்துள்ளனர். போலீசார் அறைக்குள் சென்று பார்த்தபோது சிறிய ரக கேமராக்களை டைல்ஸ் கல்லுடன் சேர்த்து வைத்து ஒட்டி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கடை உரிமையாளர் ராஜேஷ் கண்ணன், மீரா மைதீன் ஆகிய 2 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் கடையில் நவம்பர் மாதம் 2-ம் தேதி ஒரு கேமராவும் மற்றும் டிசம்பர் 18-ம் தேதி ஒரு கேமராவும் என மொத்தம் மூன்று கேமரா வைத்ததாகவும், அறையில் இருந்த கருப்பு டைல்ஸ்க்கு இடையே கேமரா வைத்ததாகவும் கூறியுள்ளனர்.
மேலும், ஒரு மாதமாக இந்த இடத்தில் கேமரா வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் தடயவியல் துறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடற்கரைக்கு அருகில் ராமேஸ்வரம் நகராட்சி சார்பில் உடை மாற்றும் அறை இல்லாதது இது போன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணம் எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“