‘வேறு மாநிலத்தில் தமிழர்களுக்கு இப்படி வேலை கிடைத்திருக்குமா?’ – நீதிபதி விளாசல்

இதேபோல வேறு மாநிலத்தில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் இந்நேரம் தேச விரோத செயல் என்று முத்திரை குத்தப்பட்டிருக்கும்

தெற்கு ரயில்வேயில் வட மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமனம் வழங்கப்பட்டு இருப்பதற்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஆர்.பன்னீர்செல்வம் கடந்த 2014-ல் சென்னைஉயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “தெற்கு ரயில்வேயில் உதவியாளர், சமையலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 11 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதில் விண்ணப்பத்தில் சான்றொப்பம் இல்லை எனக்கூறி 3 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஆனால் சான்றொப்பம் இல்லாத வட மாநிலத்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இதுபோன்ற குரூப்-4 பணிகளுக்கு சம்பந்தப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த நபர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற நடைமுறையை மீறி இந்தப் பணியிடங்கள் வட மாநிலத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் ரயில்வே தேர்வு வாரியம் இருந்தும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. இதில் அதிகாரிகள், புரோக்கர்களுடன் சேர்ந்து கொண்டு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, “மனுதாரர் கூறியிருக்கும் முறைகேடு சாதாரண விஷயம் அல்ல. ஏற்கெனவே கடந்த 2017-ல் தபால் துறையிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்துள்ளன. இதேபோல வேறு மாநிலத்தில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் இந்நேரம் தேச விரோத செயல் என்று முத்திரை குத்தப்பட்டிருக்கும். தமிழகத்தில் வட மாநிலத்தவர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பதற்காக தமிழர்களின் விண்ணப்பங்களை திட்டமிட்டு நிராகரித்துள்ளனர்.

இது கடும் கண்டனத்துக்குரியது. எனவே இந்த வழக்கை தனி நீதிபதி விசாரிப்பதை விட இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தால் தான் சரியாக இருக்கும்” என கருத்து தெரிவித்து விசாரணையை அடுத்த வாரத் துக்கு தள்ளி வைத்தார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: High court about north indians employment in southern railway

Next Story
கொங்கு ஈஸ்வரன் மாநாட்டுக்கு தடை கேட்ட தனியரசு கட்சி பிரமுகருக்கு அபராதம்: ஐகோர்ட் அதிரடிKongu Eswaran Conference, Fine To MLA Thaniyarasu Party Man, ஈஸ்வரன் மாநாடு, தனியரசு கட்சி பிரமுகருக்கு அபராதம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com