விசாரணை ஆணையத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை! – ஐகோர்ட்

விசாரணை ஆணையத்தின் மீது பொது மக்கள் நம்பிக்கை இழப்பு

By: Updated: July 26, 2018, 12:40:35 PM

ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்படும் விசாரணை ஆணையத்தின் மீது பொது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த 2006 – 2011 திமுக ஆட்சியில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. 2011ல் ஆட்சி மாற்றத்துக்கு பின், தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக கூறி, இதுசம்பந்தமாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

இந்த ஆணையம் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும், துணை முதல்வருக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து நோட்டீஸை எதிர்த்தும், ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் வழக்கு தொடர்ந்த கருணாநிதி 2015 ஆம் ஆண்டு விசாரணை ஆணையத்திற்கு தடை உத்தரவு பெற்றார்.

இந்நிலையில், இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. 2015 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்ட ஆணையத்துக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக நிதி ஒதுக்கி வருவது குறித்து நீதிபதி கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அப்போது நீதிபதி, உயர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டும் ஆணையத்துக்கு நிதி ஒதுக்கி, அரசு நிதியை வீணடிப்பதாக கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் முறைகேடு புகார்கள் இருக்குமானால் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்து விசாரணை தள்ளிவைத்து இருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்படும் விசாரணை ஆணையத்தின் மீது பொது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். வெறும்கண்துடைப்புக்காவே இது போன்ற விசாரணை ஆணையத்தை அரசு அமைத்துள்ளது என கருத்து தெரிவித்தார். இதுபோன்ற ஆணையங்கள் அமைப்பதன் மூலம் பொது மக்களின் வரி பணத்தை வீணடிக்க கூடாது என தெரிவித்தார்.

இது வரை அரசால் எத்தனை விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளது? அவற்றிற்கு எத்தனை வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன? இதற்கு அரசால் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? என்பது தொடர்பாக இன்று மதியம் 2.15க்கு அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:High court about retired judges investigation commission

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X