High court asks report for video on Ariyalur girl suicide case: அரியலூர் மாணவி தற்கொலை வழக்கில், அந்த மாணவி பேசிய வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், திருமனூர் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர். முருகேசன். இவரது மகள் லாவண்யா. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இவர் தங்கியிருந்த விடுதியில் வார்டன், அனைத்து அறைகளையும் சுத்தம் செய்ய சொன்னதால், மன உளைச்சல் ஏற்பட்டு லாவண்யா தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது.
இதனிடையே, மாணவி லாவண்யா இறப்பதற்கு முன், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வீடியோவில், பள்ளி நிர்வாகத்தினர் தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி கட்டாயப்படுத்தியதாக கூறியிருந்தார்.
இதனால், பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோரும், பாஜகவினரும் தொடர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து மதம் மாறும்படி வற்புறுத்தியதால் லாவண்யா தற்கொலை செய்ததாக அவரது சித்தி சரண்யாவும் குற்றம்சாட்டினார்.
இதனிடையே, லாவண்யா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விடுதி வார்டன் சகாயமேரியை (62) கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் மாணவி லாவண்யா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக்கோரி அவரது தந்தை முருகானந்தம் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில், எனது மகளை கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி பள்ளி நிர்வாகத்தினர் கொடுத்த நிர்பந்தத்தால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார். எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்ற வேண்டும். விடுதி வார்டன் சகாயமேரி, நிர்வாகி ராக்லின்மேரி மற்றும் பள்ளித் தலைமையாசிரியர் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி லாவய்ணா பேசியதை வீடியோ பதிவு செய்த முத்துவேல் நாளை காலை 10 மணிக்கு வல்லம் டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும், வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போனை ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நாளை முத்துவேல் விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வீடியோவை சென்னையிலுள்ள தடயவியல் பரிசோதனை மையத்துக்கு நாளையே டிஎஸ்பி அனுப்பி வைக்க வேண்டும். தடயவியல் மைய இயக்குநர் செல்போனை ஆய்வு செய்து, வீடியோவில் பதிவானது மாணவியின் குரல் தானா என்பதை உறுதி செய்து அதே நாளில் அறிக்கை அளிக்க வேண்டும். மாணவியின் உடற்கூராய்வு அறிக்கையை தஞ்சாவூர் தடயவியல் ஆய்வு மைய அலுவலர் ஜன. 27-ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மாணவியின் பெற்றோரும் நாளை காலை டிஎஸ்பி பிருந்தா முன்பு ஆஜராக வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.