போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று ஜாக்டோ ஜியோ இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
2003-ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றது.
ஜாக்டோ ஜியோ போராட்டம் : தீர்ப்பை எதிர்த்து மேற்முறையீடு செய்ய திட்டம்
ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தங்களுக்கு கல்வி பாதிக்கப்படுவதாகவும், ஆசிரியர்கள் உடனே பள்ளிக்கு திரும்பி பாடம் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள், 2003 ஆம் ஆண்டில் ஓய்வூதிய திட்டம் மாற்றி அமைக்கப்பட்ட பின்னர், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுப்பது எப்படி சரியாக இருக்கும் என்றும் கேள்வி எழுப்பினர். மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு வரும் 25 ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஜாக்டோ ஜியோ இன்று முடிவு செய்கிறது. மேலும் திட்டமிட்டபடி இன்று வேலைநிறுத்தம் நடைபெறும் எனவும், மேல்முறையீடு செய்வது குறித்து கலந்தாலோசிக்கப்படும் எனவும் அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.