சென்னையைச் சேர்ந்தவர் ஆர்.கிரிஜா(64). இவருக்கு தி.நகர் அஜீஸ் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் எஸ்.ராமலிங்கம் என்பவர் குடியிருந்து வருகிறார். இவர் தி.மு.க வட்டச் செயலராக உள்ளார்.
கிரிஜா, ராமலிங்கத்திடம் வீட்டை காலி செய்யக் கூறியும் அவர் மறுத்து வந்துள்ளார். இதையடுத்து கிரிஜா சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரை வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ராமலிங்கம் தாக்கல் செய்த மனுக்கள், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. வீட்டை காலி செய்ய மறுத்ததால், ராமலிங்கத்துக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கிரிஜா தாக்கல் செய்தார். ,
இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கிரிஜா தரப்பில், ஆளும் கட்சியில் வட்டச் செயலராக இருக்கும் ராமலிங்கம் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார். 64 வயதான என்னை மிரட்டுகிறார். 13 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியேற்ற முடியவில்லை. 2017-ல் இருந்து வாடகை தரவில்லை என்று தெரிவித்தார்.
இந்த வழக்கில் கடந்த முறை நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த தி.மு.க வட்டச் செயலாளர் ராமலிங்கம், கடந்த ஆக.24-ம் தேதிக்குள் வீட்டை காலி செய்து, வாடகை பாக்கியையும் கொடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் அவர் கூறியபடி நடக்கவில்லை.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கு நேற்று (செப்.1) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, "ராமலிங்கம் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அவமதிக்கிறார். போதிய எண்ணிக்கையில் போலீசார் கொண்டு தி.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து, 48 மணி நேரத்துக்குள் ராமலிங்கத்தை மாநகர காவல் ஆணையர் அகற்ற வேண்டும்.
பின், வீட்டை கிரிஜாவிடம் ஒப்படைத்து, 4-ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும். இந்த உத்தரவு குறித்து, உடனடியாக ஆணையருக்கு தொலைபேசி அல்லது இ-மெயில் மூலம் அரசு வழக்கறிஞர் தகவல் தெரிவிக்க வேண்டும்" என நீதிபதி உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“