பெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த நடிகர் எஸ்.வி. சேகரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
சாமானிய மக்கள் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படுமோ, அதேபோல எஸ்.வி. சேகருக்கு எதிரான வழக்கிலும் கையாள வேண்டும் என்று நீதிபதி ராமதிலகம் உத்தரவிட்டுள்ளார்.
பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக, செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பெண் செய்தியாளரின் கன்னத்தில் தட்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலை நியாயப்படுத்தி, நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகர், தனது முகநூல் பக்கத்தில் பெண் நிருபர்கள் குறித்து அவதூறாக ஒரு பதிவை வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்ததால் உடனடியாக அப்பதிவை அவர் நீக்கிவிட்டார். ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் எஸ்.வி. சேகருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில், தான் வெளியிட்ட கருத்துக்காக எஸ்.வி. சேகர் மன்னிப்பு கேட்டார். ”மன வருத்தம் ஏற்பட்டுள்ள பத்திரிக்கை சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அப்பதிவு தன்னுடைய கருத்து அல்ல. முகநூலில் உள்ள நண்பர் ஒருவர் பதிவு செய்திருந்ததை படிக்காமல் பார்வார்டு செய்து விட்டேன். அதுதான், தான் செய்த தவறு ” என்று அவர் விளக்கம் கொடுத்தார் .
இதற்கிடையில், எஸ்.வி. சேகருக்கு எதிராக பத்திரிக்கையாளர்கள் நல பாதுகாப்பு சங்கம் கொடுத்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் எஸ்.வி. சேகருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ், இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் முன் ஜாமீன் கேட்டு நடிகர் எஸ்.வி. சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், பெண்ணினத்தையோ, குறிப்பாக பத்திரிக்கை சமூகத்தையோ அவமதிக்கும் உள்நோக்கமோ, குற்ற எண்ணமோ எள்ளளவும் தனக்கு கிடையாது. சமூக வலைத்தளங்களில் வரும் செய்தியை பொதுத்தளத்தில் பகிரும் பழக்கத்தினால், சம்பந்தப்பட்ட செய்தியையும் பார்வார்டு செய்ததை தவிர, வேறு எந்த தவறும் செய்ய வில்லை. எனவே, தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டிருந்தார் .
இந்த வழக்கு கோடை விடுமுறைகால நீதிமன்றத்தில் நீதிபதி ராமத்திலகம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மனுதாரர் தான் போட்ட பதிவை உடனடியாக நீக்கிவிட்டார். இவ்வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடை மனுக்களுக்கு பதிலளிக்கும் வரை, மனுதாரருக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும். அவரை கைது செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும். மனுதாரரின் செயலில் எந்த குற்றமும் இல்லை’ என்று தெரிவித்தார்.
எஸ்.வி. சேகருக்கு முன் ஜாமீன் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து வாதிட்ட வழக்கறிஞர்கள், அவரது வீட்டுக்கு முன்பு போராட்டம் நடத்திய பத்திரிகையாளர்கள் கைதாகி விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், தான் தவறே செய்யவில்லை எனக்கூறும் சேகர் தலைமறைவாகியுள்ளார். பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பெண் சமூகத்தையும் கேவலப்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டிருக்கிறார். முன்ஜாமீனை நிராகரிக்க வேண்டும். இன்றே அவர் சரணடைய உத்தரவிட வேண்டும். அவர் செயலில் தவறில்லை என்றால் ஏன் நீதிமன்றத்தை நாடினார். விசாரணையை சந்திக்க வேண்டியதுதானே என்று காரசாரமாக வாதிட்டனர்.
மறுபதிவு செய்து பின்னர் நீக்கியதை மனுதாரர் ஒப்புக் கொண்டுள்ளார். மறுபதிவு செய்ததே குற்றம். அதன் அடிப்படையில்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.வி.சேகரை தலைமை செயலாளர்தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற கருத்துக்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்ட மனுதாரர், பெண்களுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டிருக்கிறார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், புலன் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. அசல் பதிவை கேட்டு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்று தெரிவித்தார் .
இதற்கு நீதிபதி, இதேபோன்ற குற்றச்சாட்டு மற்ற பொதுமக்களுக்கு எதிராக வரும்போது எடுக்கப்படும் நடவடிக்கைக்கும், சேகர் மீதான புகாருக்கும் பாரபட்சம் காட்டப்படுகிறது? போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகத்தினரை கைது செய்யும்போது, சேகர் மீது ஏன் வேறு விதமாக கையாளப்படுகிறது? என்று கேள்வி கேட்டார். அதன்பின்னர், இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி எஸ். ராமத்திலகம் தள்ளி வைத்தார்.
அந்த வழக்கில், நீதிபதி ராமதிலகம் இன்று தீர்ப்பு கூறினார். அதில், பெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறாக, முகநூலில் கருத்து பதிவிட்டதாக, பதிவு செய்யப்பட்ட வழக்கில், நடிகர் எஸ். வி. சேகரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்தார். மேலும், சாமானிய மக்களுக்கு எதிராக இது போன்ற ஒரு புகார் வந்தால், அதன் மீது போலீசார் என்ன நடவடிக்கை எடுக்குமோ, அதேபோல சேகருக்கு எதிரான வழக்கிலும் போலீசார் நடந்து கொள்ள வேண்டும் என்று நீதிபதி ராமதிலகம் தெரிவித்தார்.
இந்த உத்தரவை அடுத்து, எஸ்.வி. சேகர் மீது போலீசார் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு, செய்தியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க – எஸ்.வி.சேகர் விஷயத்தில் போலீஸ் பாரபட்சமாக நடப்பது ஏன்? ஐகோர்ட் நீதிபதி கேள்வி