madras high court, court news, chennai high court, cylinder delivery, tamil nadu news, news, news in tamil, சென்னை ஐகோர்ட், தமிழக செய்திகள்
சிலிண்டர் டெலிவரி பணியாளர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டுமென எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
Advertisment
எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரான சிவக்குமார் சென்னை நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியாளர்களுக்குத் தேவையான முககவசம், கிருமிநாசினி கையுறை போன்றவற்றை வழங்கவும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், புஷ்பா சத்யநாராயணா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த பதில் மனுக்களில், கிடங்குகளில் சிலிண்டர் நிரப்புவது மற்றும் டெலிவரி செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேவையான கிருமி நாசினி, முகக்கவசம், கையுறை ஆகியவற்றை வழங்க வேண்டுமென அனைத்து வினியோகஸ்தர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு மருத்துவ செலவுக்கான ஒரு லட்ச ரூபாய்க்கு காப்பீடு தொகையும், ஒருவேளை மரணம் ஏற்பட்டால் அவரது குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் கருணை தொகையும் வழங்கப்படும் என மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவித்துள்ளதாகவும், அதற்கான ஒப்பந்தங்களில் அனைத்து விநியோகஸ்தரும் கையெழுத்திட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மேற்கொண்டு எந்த உத்தரவுகளை பிறப்பிக்க தேவையில்லை என கூறிய நீதிபதிகள், சிலிண்டர் டெலிவரி பணியாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர்.
மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென எண்ணெய் நிறுவனங்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil