பொங்கல் பரிசுத் தொகை ரூ.1000ஐ வங்கிக் கணக்கில் வரவு வைப்பது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு, வேட்டி, சேலை போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் ரூ. 1,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 5 அன்று அறிவித்தார். அதன்படி 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 ரேஷன் அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த, பொங்கல் பரிசு ரூ.1,000 ரேசன் கடைகள் மூலம் ரொக்கப்பணமாக வழங்கப்பட உள்ளது. தற்போது பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் நடைபெற்று வருகிறது. மேலும், வரும் ஜனவரி 10-ம் தேதி முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தநிலையில், பொங்கல் பரிசுத் தொகையை வங்கி கணக்கில் வரவு வைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. சுவாமிமலையை சேர்ந்த சுந்தர விமலநாதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: “கடந்த 2017-ம் ஆண்டு முதல் பொங்கலை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தொடர்ச்சியாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இலங்கைத் தமிழர்கள் உட்பட சுமார் 2.20 கோடி குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
20 வகையான பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்புடன், வேஷ்டி, சேலையும் கடந்த சில ஆண்டுகள் வரை வழங்கப்பட்டது. இதில் வேஷ்டி, சேலைகளை தமிழ்நாடு நெசவாளர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என அரசு பாராட்ட தகுந்த முடிவை எடுத்துள்ளது. ஆனால் அரிசி, வெல்லம், முந்திரி, ஏலம் உள்ளிட்ட 20 வகையான விவசாயப் பொருட்களில் பெரும்பாலானவை அருகிலுள்ள மாநிலங்களில் இருந்து வாங்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, பச்சரிசி, சர்க்கரை வழங்கப்படும் என அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினையடுத்து, பொங்கல் பரிசுத் தொகுப்பில் வெல்லம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுகுறித்த அறிவிப்பு வெளியாகாததால் வெல்லம் தயாரிப்பில் ஈடுபட்ட விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கப்படும் கரும்பு ஒன்றின் கொள்முதல் விலை 33 ரூபாயாக உள்ள நிலையில், விவசாயிகளிடம் இருந்து வெறும் 9-11 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டு ஊழல் மற்றும் முறைகேடுகள் மட்டுமே நடைபெறுகின்றன. மேலும் கரும்பு விவசாயிகளுக்கு ECS முறையில் பணம் கொடுக்கப்படுவதில்லை. இது இடைத்தரகர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. எனவே வங்கி கணக்கு பணப்பரிமாற்ற முறை மூலம் கரும்பு விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட வேண்டும்.
மேலும் பொங்கல் பரிசுத்தொகையான 1000 ரூபாயை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும், மேலும் வெள்ளைச் சர்க்கரை, வெல்லம், தேங்காய், வெற்றிலை, முந்திரி,மற்றும் ஏலக்காய் வழங்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வில் இன்று (ஜனவரி 8) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீர கதிரவன் ஆஜராகி, “தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்காக 1000 ரூபாய், பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு விட்டது. மனுதாரர் கடைசி நேரத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். வெள்ளை சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளது. கடந்த ஆண்டுகளில் வெல்லம் முன்கூட்டியே கொள்முதல் செய்து மக்களுக்கு கொடுக்கப்பட்ட போது, வெல்லம் உருகியதாகவும், கெட்டுவிட்டதாகவும் புகார் வந்தது. எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களில் குறிப்பாக மகளிர் உரிமைத் தொகையை வங்கி கணக்கில் செலுத்துவதை போல பொங்கல் பரிசுத்தொகையை வங்கி கணக்கில் செலுத்தலாமே? என கேள்வி எழுப்பினர். மேலும் கரும்பு கொள்முதல் செய்யப்படும் விவசாயிகளுக்கும் வங்கி கணக்கில் பணம் செலுத்தலாமே?. இதனால் தமிழக அரசுக்கு என்ன சிக்கல் ஏற்படப்போகிறது” என்றும் கேள்வி எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து, மனுதாரரின் மற்றொரு கோரிக்கையான சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் வழங்க பரிசீலனை செய்யலாம். குறைந்தபட்சம் அடுத்து வரும் பொங்கல் பண்டிகையின்போது இதனை செய்யலாம் என தெரிவித்து, பொங்கல் பரிசுத்தொகையை வங்கி கணக்கில் வரவு வைப்பது குறித்து தமிழக அரசு உரிய முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.