லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை 2-வது முறையாகத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைகிளை, லஞ்சம் பெறுவதைத் தடுக்க வேண்டிய அமலாக்கத்துறையிலேயே லஞ்சம் ஊடுருவி உள்ளதை சகித்துக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவர் சுரேஷ்பாபு மீது சொத்துக்குவிப்பு வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க அவரிடம் இருந்து ரூ. 20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, அங்கித் திவாரி ஜாமீன் கோரி முதலில் தாக்கல் மனுக்களை திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் 2 முறை தள்ளுபடி செய்தது. அடுத்து, அங்கித் திவாரி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். அதில், 100 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளேன், இதுவரை தன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்று குறிப்பிட்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரி அங்கித் திவாரி 2வது முறையாக உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
அங்கித் திவாரி ஜாமீன் கோரி தாக்கல் செய்த சீராய்வு மனு மார்ச் 12-ம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி விவேக்குமார் சிங், இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை எனக் கூறி வழக்கில் இருந்து விலகினார்.
இதைத் தொடர்ந்து, அங்கித் திவாரியின் ஜாமீன் கோரி தாக்கல் செய்த சீராய்வு மனு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், நீதிபதி தண்டபாணி முன்பு வெள்ளிக்கிழமை (15.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிக்குமார், அங்கித் திவாரி வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையின் குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
அரசுத் தரப்பு வழக்கறிஞரின் பதிலைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி தண்டபாணி, இந்த வழக்கில் லஞ்சஒழிப்புத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது எனக் கூறி அங்கித் திவாரியின் சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்தார்.
மேலும், “அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் இந்த வழக்கு தீவிரமானது. அதிகாரிகள் லஞ்சம் பெறும் செயல்கள் அதிகரித்திருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. சட்டவிரோத செயல்களையும், லஞ்சம் பெறுவதையும் தடுக்க வேண்டிய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற துறைகளில் லஞ்சம் ஊடுருவி உள்ளது என்பதைச் சகித்துக்கொள்ள முடியாது” என்று நீதிபதி தண்டபாணி தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“