அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு, மாத்திரை மருந்துகளுக்கு உரிய மருத்துவ சீட்டு வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் நோட்டி அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால் எனது குழந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று சிந்துஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் செய்தார்.
அதில், மனுதாரர் தனது குழந்தைக்கு தடுப்பூசி போட்டபின், பாரசிட்டாமல் மருந்தை அதிக அளவு செவிலியர் கொடுக்க சொல்லியதால் குழந்தை உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால் எனது குழந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு, சிகிச்சைக்கு பின் மாத்திரை மருந்துகளுக்கு உரிய மருத்துவ சீட்டு வழங்க உத்தரவிடக் கோரியிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் சுந்தர் மற்றும் பரத சக்ரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இந்த வழக்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர், மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட மருத்துவ அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.
மேலும், மருத்துவர்களின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் கேட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"