வளரிளம் பருவத்தினர் காதலிக்கும்போது கட்டிப்பிடிப்பதும், முத்தம் கொடுப்பதும் குற்றம் ஆகாது என்று இளைஞர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் அதே மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்துள்ளனர். அந்த இளைஞர் காதலித்த இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாகவும், பின்னர், அவர் திருமணம் செய்துக்கொள்ள மறுத்து ஏமாற்றிவிட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக அந்த இளைஞர் மீது இந்திய தண்டனை சட்டம் 354-A(1)(i) (உடல் தொடர்பு மற்றும் வெளிப்படையாக அனுமதியின்றி பாலியல் உணர்வை வெளிப்படுத்துதல்) பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு என்பது ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. போலீஸ் சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே அந்த இளைஞர் சார்பில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‛‛வளர் இளம் பருவத்தில் காதலிப்பவர்கள் கட்டி பிடிப்பதும் முத்தம் கொடுப்பதும் இயல்பானதாகவே பார்க்கப்படுகிறது. மனுதாரர் திருமணம் செய்ய மறுத்த குற்றச்சாட்டை அப்படியே எடுத்துக் கொண்டாலும் காதலிப்பவர்கள் கட்டி பிடிப்பதும் முத்தம் கொடுப்பதும் ஐ.பி.சி 354 ஏ (1) (I) பிரிவின் கீழ் குற்றமாக பார்க்கும் வகையில் விபரம் எதுவும் இல்லை” என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.
மேலும், இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்வதாக கூறி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடியாக உத்தரவிட்டார். இது தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
சிறார் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமாகாது என்று ஏற்கனவே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு ஒன்றில் கூறியிருந்தார். அந்த தீர்ப்பு என்பது உச்சநீதிமன்ற கண்டனத்திற்கு உள்ளாகி ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வளர் இளம் பருவத்தினர் காதலிக்கும்போது கட்டிப்பிடிப்பதும், முத்தம் கொடுப்பதும் குற்றம் ஆகாது என்றும் இளைஞர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்தும் தீர்ப்பு அளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“