தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பட்டதாரி, பட்டதாரி அல்லாதவர் என பாகுபாடு பார்க்காமல் பணி மூப்பு அடிப்படையில் பயணச் சீட்டு ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் புதூர் கிளையில் நடத்துனராக பணிபுரியும் கண்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் 1994-ல் நடத்துனராக பணியில் சேர்ந்தேன். தற்போது சிறப்பு நிலை நடத்துனராக பணிபுரிந்து வருகிறேன். அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர்களாக பணிபுரிபவர்களுக்கு பயணச்சீட்டு ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கப்படும். 1985-ம் ஆண்டின் பொதுப் பணி விதிகள்படி பயணச்சீட்டு ஆய்வாளர் பதவி உயர்வில் பட்டதாரி நடத்துனர்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
அந்த ஒதுக்கீட்டு அடிப்படையில் நான் பி.ஏ பட்டப்படிப்பு முடித்திருப்பதால் எனக்கு பயணச்சீட்டு ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கக்கோரி மனு அளித்தேன். மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் பயணச்சீட்டு ஆய்வாளர் பணியிடங்களில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பாமல் பட்டப்படிப்பு முடிக்காத நடத்துனர்களை கொண்டு 75 சதவீத பயணச்சீட்டு ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே, எனக்கு 25 சதவீத ஒதுக்கீட்டின் கீ்ழ் பயணச்சீட்டு ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கோரி இருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பயணச்சீட்டு ஆய்வாளர் பதவி உயர்வுக்கு தடையாணை பிறப்பிக்கப்பட்டது. இதைடுத்து, இந்த மனு நீதிபதி விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஐ.என்.டி.யூ.சி மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு பேரவை சார்பில் பதவி உயர்வில் பட்டதாரிகளுக்கு தனி ஒதுக்கீடு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. சி.ஐ.டி.யூ, எல்.பி.எஃப் தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் மூத்த வழக்கறிஞர் அஜய்கோஸ், வழக்கறிஞர் ராகுல் ஆகியோர் வாதிடுகையில் அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் தொழிற்சங்கங்கள் இடையே தொழில் தாவா சட்டத்தின் கீழ் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. அந்த ஒப்பந்தங்கள் அடிப்படையில் பணிமூப்பு அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து, இந்த வழக்கில் உத்தரவிட்ட நீதிபதி, “அரசு போக்குவரத்துக் கழகத்தில் பயணச்சீட்டு ஆய்வாளர் பதவி உயர்வுக்கு பணிமூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடரவில்லை. பதவி உயர்வில் பொதுப்பணி விதிகள் பொருந்தாது. பயணச்சீட்டு ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கும் போது பட்டதாரி, பட்டதாரி அல்லாதவர் என்ற பாகுபாடு கூடாது. பணிமூப்பு அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும்” என மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.