கண்டதேவி தேர் வெள்ளோட்டம் தாமதமாவது குறித்து தொடரப்பட்ட வழக்கில், மாநில அரசால் தேர் வெள்ளோட்டம் நடத்த முடியாவிட்டால் துணை ராணுவனத்தினரை கொண்டு வெள்ளோட்டம் நடத்த உத்தரவிடலாமா? என்று ஐகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், கண்டதேவியை சேர்ந்த மகா. சிதம்பரம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கண்டதேவியில் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் பழைய தேர் பழுதான நிலையில் புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. ஆனால், கண்டதேவி புதிய தேர் வெள்ளோட்டம் இன்னும் நடத்தப்படாமல் உள்ளது. தேர் வெள்ளோட்டம் நடத்தக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் 2019-ல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது புதிய தேர் விரைவில் வெள்ளோட்டம் விடப்படும் என்றும் அதன் பிறகு கோயில் விழாக்களில் தேரோட்டம் நடத்தப்படும் என அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது.
ஆனால், இதுவரை கண்டதேவி தேர் வெள்ளோட்டம் நடைபெறவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அறநிலையத் துறை இணை ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி பி.புகழேந்தி முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், கண்டதேவி கோயில் புதிய தேர் தயாராக உள்ளது. பல பிரிவினர் பிரச்னை செய்வதால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனால், தேர் வெள்ளோட்டம் நடத்துவது தொடர்பாக முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், பதற்றமான சூழல் காரணமாக சமரசக் கூட்டம் நடத்துவதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதி, “சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இன்னமும் பல பிரிவினர் ஒற்றுமை இல்லாமல் இருப்பது வேதனையானது. பிரச்னைக்குரிய பிரிவினர்களை அழைத்து அரசால் ஒரு கூட்டம் கூட போட முடியாதா?
தெருவில் நிற்க வைக்கவா பல கோடி ரூபாய் செலவில் தேரை செய்தது? அரசின் நடவடிக்கை திருப்தியாக இல்லை. மாநில அரசால் தேர் வெள்ளோட்டம் நடத்த முடியாவிட்டால் துணை ராணுவனத்தினரை கொண்டு வெள்ளோட்டம் நடத்த உத்தரவிடலாமா? அனைத்து பிரிவு மக்களின் உணர்வுகளையும் அரசு புரிந்துகொள்ள வேண்டும். தேர்தல் நெருங்கிவிட்டதால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறுவதை ஏற்கிறோம். நவம்பர் 17-ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறிய நீதிபடி விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“