/indian-express-tamil/media/media_files/2025/07/01/lock-up-death-madurai-hc-2025-07-01-13-09-18.jpg)
இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கைப் பொறுத்தவரை, நகை காணாமல் போனது பற்றி ஏன் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை, அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என காவல்துறையிடம் கேள்வி எழுப்பினர்.
நகை திருட்டு தொடர்பாக இளைஞர் அஜித்குமார் காவல் நிலையத்தில் மர்ம மரணம் அடைந்த வழக்கு, கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட நிலையில், நகை காணாமல் போன வழக்கில் ஏன் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்த அஜித்குமார் இளைஞர் நகை திருட்டு தொடர்பாக காவல் நிலையத்தில் மர்ம மரணம் அடைந்த வழக்கு, கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சி.பி.ஐ அல்லது ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் மரியா கிளேட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை காவல்துறை உரிய முறையில் விசாரிக்கவில்லை. நகைக் காணாமல் போனது தொடர்பாக முதலில் வழக்கு பதிவு செய்யாமல், அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மர்மமான முறையில் அடித்து துன்புறுத்தி கொலை செய்திருக்கிறார்கள். இந்த வழக்கை உரிய முறையில் காவல்துறை விசாரிக்கவில்லை. முதலிலிருந்தே அவரை குற்றவாளி என தீர்மானித்து அவரை விசாரித்ததாகவும் இந்த வழக்கைப் பொறுத்தவரை காவல்துறை முழுமையாக அவரை சித்ரவதை செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டதாகவும் மேலும், அஜித்குமார் உயிரிழந்து 48 மணி நேரத்துக்கு மேலாகியும் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த விதமான வழக்கும் பதிவு செய்யப்படவில்லை எனவும் குற்றத்தில் ஈடுபட்டவர்களைப் பாதுகாக்கவே காவல்துறை முயற்சி செய்வதாகவும் வாதிடப்பட்டது. மேலும், இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
மேலும், காவல் சித்ரவதையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருடன் சிலர் 50 லட்சம் ரூபாய் தருவதாகவும் எந்த வழக்கும் தொடரக்கூடாது என்று சிலர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டடாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கைப் பொறுத்தவரை, நகை காணாமல் போனது பற்றி ஏன் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை, அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என காவல்துறையிடம் கேள்வி எழுப்பினர்.
மேலும், சிறப்பு காவல் படையினர் யார் சொல்லி இந்த வழக்கை விசாரிக்க கையில் எடுத்தார்கள். யார் இந்த வழக்கை ஒப்படைத்தார்கள். அவர்கள் இந்த கையில் எடுக்க முடியுமா, விசாரிக்க முடியுமா என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
உயர் அதிகாரிகளைக் காப்பாற்ற வேண்டும் என்று முழுமையாக விவரங்களை மறைக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
திருட்டு வழக்கில் ஒருவரை விசாரணை என்ற பெயரில் அடித்து கொல்லலாமா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், புலனாய்வு செய்த காவல்துறை முழு உண்மையையும் சொல்ல மறைக்கிறீர்களா என கேள்வி எழுப்பினர். மேலும், இந்த வழக்கில் எஸ்.பி மாற்றப்பட்டுள்ளார், இப்படி எல்லாரையும் வழக்கில் இருந்து விடுவிக்கிறீர்களா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கில் நகைக் காணாமல் போனது பற்றி ஏன் முதலில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை, அவ்வாறு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் இந்த வழக்கை நீங்கள் எவ்வாறு விசாரித்தீர்கள், அவ்வாறு விசாரிப்பதற்கு யார் அதிகாரம் கொடுத்தது, யாருடைய அழுத்தத்தின் காரணமாக நீங்கள் இந்த வழக்கை விசாரிக்க முடிவு செய்தீர்கள் என்பது தொடர்பான விவரங்களை தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.