தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிரந்தர டீன் நியமிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை கே.கே நகரைச் சேர்ந்த வெரோணிக்கா மேரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் மதுரை உட்பட 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தமிழகத்தின் 2-வது பெரிய அரசு மருத்துவமனை. நாள்தோறும் இங்கு 9,000 பேர் வெளிநேயாளிகளாக சிகிச்சை பெறவருகின்றனர். உள்நோயாளிகளாக 3,000 பேர் உள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் டீன் (முதல்வர்) பொறுப்பு முக்கியமானது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர், ஏப்ரல் 30 ஆம் தேதி ஓய்வு பெற்றார். தற்போது மூத்த மருத்துவ பேராசிரியர் பொறுப்பு முதல்வராக பணிபுரிகிறார். ராஜாஜி மருத்துவமனையில் பல அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. மேலும், இதயம், கண், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட மருத்துவ மையம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வாகன போக்குவரத்து நிறுத்த வசதி, அறுவை சிகிச்சைகளில் தாமதம், அதிகளவிலான கூட்டம், சிகிச்சை அளிப்பதில் தாமதம், தரம் குறைந்த மருத்துவம், அவசரகால மருந்துகளை கொள்முதல் செய்வது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண நிரந்தர முதல்வரை பணியமர்த்துவது மிகவும் அவசியம்.
தமிழகத்தில் மதுரை மட்டுமன்றி கரூர், திருச்சி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிரந்தர முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அரசு மருத்துவமனைகளில் பல்வேறு பணிகளுக்கு உறுதியான முடிவெடுக்க நிரந்தர முதல்வரால்தான் முடியும். பொறுப்பு முதல்வரால் உறுதியான முடிவெடுக்க முடியாது. இதனால் அரசு மருத்துவமனைகளில் நிர்வாக பணி, கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மதுரை உட்பட அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பணியிடங்களில் நிரந்தர முதல்வரை நியமிக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ”மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரியை திறக்கிறீர்கள். ஆனால் முதல்வரை நியமிப்பதில்லை. முதல்வர் நியமனம் செய்யப்படாத போது புதிய மருத்துவக் கல்லூரி திறப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், மனு தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்குநர் பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி, விசாரணையை செப்டம்பர் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“