லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் என, வழக்கு ஒன்றை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை சூர்யா நகரைச் சேர்ந்த எம்.பரணிபாரதி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''நான் எம்இ முடித்துள்ளேன். மின் வாரியத்தில் புதிதாக 325 உதவிப் பொறியாளர்கள் தேர்வு செய்வது தொடர்பாக மின்வாரியம் சார்பில் 14.2.2018-ல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இப்பணிக்காக அண்ணா பல்கலைக்கழகம் 30.12.2018-ல் நடத்திய எழுத்துத்தேர்வில் நானும் பங்கேற்றேன்.
இந்நிலையில் எழுத்துத்தேர்வுக்கு முன்பு கேள்வித்தாள் வெளியானது. மின்வாரியத்தில் பணிபுரிவோர்கள் கேள்வித்தாள் விவரங்களை தேர்வுக்கு முன்கூட்டியே தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்கியுள்ளனர். இது தொடர்பாக விசாரணைக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் 3.2.2019-ல் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணை முடிந்து கேள்வித்தாள் வெளியானது எப்படி? என்பது இன்னும் தெரியவில்லை.
இந்நிலையில் ஒரு பணிக்கு 5 பேர் வீதம் 1,575 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளது. கேள்வித்தாள் வெளியானது எப்படி? எனத் தெரியாமலேயே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டது சட்டவிரோதம்.
எனவே, உதவி பொறியாளர் நியமன நடைமுறைக்கும், நியமன உத்தரவு வழங்கவும் தடை விதிக்க வேண்டும். மேலும், உதவிப் பொறியாளர் பணியிடத்துக்கான எழுத்துத்தேர்வை ரத்து செய்து, புதிதாக எழுத்துத்தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்'' என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று (பிப்.25) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், மின்வாரிய உதவிப் பொறியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்ற மையங்களில் செல்போன் உள்ளிட்ட எந்த மின்னணு சாதனங்கள் அனுமதிக்காத நிலையில், தேர்வு முடிந்த சில மணி நேரத்தில் எழுத்துத்தேர்வில் கேட்கப்பட்ட 120 கேள்விகளும், அதற்கான விடைகளும் சமூக வலைதளங்களில் வெளியானது எப்படி? இதனால் மின்வாரிய உதவிப் பொறியாளர் பணி நியமன விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் நீதிபதிகள், அரசுத் துறைகளில் அனைத்து நிலைகளிலும் லஞ்சம் வாங்கும் பழக்கம் உள்ளது. சிசிடிவி கேமரா, செல்போன் பயன்பாடுகளால் அதிகாரிகள் லஞ்சம் பெறுவது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.
லஞ்சம் வாங்கும் பழக்கம் முழுமையாக ஒழிய வேண்டும் என்றால் லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் அல்லது அவர்களின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும், தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இதுபோன்ற கடுமையான தண்டனை வழங்கினால் தான் லஞ்சப் பழக்கம் ஒழியும். லஞ்சம் வாங்குவது இயல்பானது என்ற நினைப்பை மாற்ற முடியும் என கருத்து தெரிவித்தனர். பின்னர் விசாரணையை மார்ச் 1-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.