Advertisment

சாராயம் குடித்து இறந்தவருக்கு தரும்போது... சுகாதாரப் பணியில் இறப்புக்கு ரூ.10 லட்சம் தரலாம் - ஐகோர்ட்

சாராயம் குடித்து இறந்தவருக்கு ரூ.10 லட்சம் கொடுக்கும்போது சுகாதாரப் பணியாளர் பணியின் போது இறப்புக்கு ரூ.10 லட்சம் தாராளமாக கொடுக்கலாம் என்று உயர் நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
madurai high court

தெரிந்தே சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் போது, அப்பாவி மனுதாரருக்கு மகன் இறப்புக்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது

திருச்சி மாவட்டம், மனப்பாறை மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு பணியாளராக பணிபுரிந்தவர் கலையரசன். இவர் கடந்த ஆண்டு மணப்பாறை பழைய அரசு மருத்துவமனையில் மருத்துவக் கழிவுகளை சுத்தம் செய்யும் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

Advertisment

இதையடுத்து, மருத்துவக் கழிவுகளை சேகரித்து தீ வைக்கும் போது கலையரசன் மீது தீ்ப்பிடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கலையரசன் இறப்புக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி அவரது தந்தை அர்ஜூனன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இன்று அந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: “மனுதாரரின் மகன் மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கொசு ஒழிப்புப் பணியாளர். அவரை கொசு ஒழிப்புப் பணிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவரை மருத்துவக் கழிவுகளை சுத்தம் செய்யும் பணிக்கு அனுப்பியது ஏன் என்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்கவில்லை. மருத்துவக் கழிவுகள் முறையாக அழிக்கப்பட வேண்டும். அதற்காக தனியார் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அப்படியிருக்கும் போது காலாவதியான மருத்துவக் கழிவுகள் பாதுகாப்பாற்ற முறையில் அழிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் மகன் மரண வாக்குமூலத்தில், குப்பைகளை தீ வைத்து எரிக்க அதிகாரிகள் கூறியதாக தெரிவித்துள்ளார்.

மருத்துவக் கழிவுகளில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களும் இருந்துள்ளது. இதனால் மனுதாரரின் மகனின் உடலில் தீ பிடித்துள்ளது. இதனால் இழப்பீடு வழங்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்துக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கியது. தெரிந்தே சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் போது, அப்பாவி மனுதாரருக்கு மகன் இறப்புக்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

எனவே, மனுதாரருக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். உயிரிழந்தவருக்கு 2 சகோதரிகள். அதில் ஒருவருக்கு திருமணமாகிவிட்டது. அவருக்கு ரூ.50 ஆயிரம், திருமணமாகாத சகோதரிக்கு ரூ.2.50 லட்சம் வழங்க வேண்டும். மீதமுள்ள ரூ.7 லட்சத்தை மனுதாரர் பெயரில் வங்கியில் 6 ஆண்டுக்கு வைப்பு நிதியாக வைக்க வேண்டும்,” என்று நீதிபதி உத்தரவிட்டது அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செய்தி: க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madurai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment