திருநெல்வேலி மாநகரில் அமைச்சர் உதயநிதியை வரவேற்று வைக்கப்பட்டுள்ள அனுமதி பெறாத ப்ளக்ஸ் பேனர்களை அகற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட சுற்றுப்பயணங்களை முடித்து நாளை திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். உதயநிதியை வரவேற்கும் விதமாக நெல்லை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், நெல்லையைச் சேர்ந்த பாலாஜி கிருஷ்ணசாமி என்பவர் இந்த ப்ளக்ஸ் பேனர்களை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நெல்லை வருகையை ஒட்டி, நெல்லை நகர் முழுவதும் அனுமதி பெறாமல் தி.மு.க.,வினர் பெரிய அளவில் பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. அனுமதி பெறாமல் ப்ளக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது என உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி நெல்லை நகரில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற உத்தரவிட வேண்டும்” என கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தனபால் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு மற்றும் நெல்லை மாநகராட்சி வழக்கறிஞரிடம் ப்ளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவ்வாறு அனுமதி பெறவில்லை என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், நெல்லை நகர் பகுதிகளில் முறையாக அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள ப்ளக்ஸ் பேனர்களை இன்றைக்குள் அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் கடும் உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“