நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த மாட்டீர்களா? ஐகோர்ட் கண்டனம்

நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டுவதில்லை என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம்

சென்னையில் பறக்கும் ரயில் பாதை அமைக்க மயிலாப்பூரைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்கு சொந்தமான 487 சதுர அடி நிலத்தை, மாவட்ட ஆட்சியர் கையகப்படுத்தினார். இதற்காக 2 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த இழப்பீட்டு தொகையை நில உரிமையாளர் அதிகரித்து தரும் படி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், 33 லட்சத்து 44 ஆயிரத்து 750 ரூபாய் இழப்பீடாக நிர்ணயித்து கடந்தாண்டு ஜூலை 31 ஆம் தேதி உத்தரவிட்டார். மேலும் 1993 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு இதுவரை வழங்காததற்காக ஒரு லட்ச ரூபாய் வழக்கு செலவாக மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்டிருந்தார்.

நீதிமன்றம் விதித்த கெடு கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத சென்னை மாவட்ட ஆட்சியர், நில ஆர்ஜித அதிகாரி ஆகியோருக்கு எதிராக ராமசாமி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டுவதில்லை என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம் என்றார்.

மேலும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மனுதாரர் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பியும் பதிலளிக்காத நில ஆர்ஜித அதிகாரி வரும் 5 ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை அன்றைக்கு தள்ளி வைத்தார்.

×Close
×Close