அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி இன்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த விபரம் வருமாறு;
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலை வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது, மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். அவர் உடல் திருச்சி - கல்லணை சாலையில் காவிரி ஆற்றுப்படுகையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது.
இந்த வழக்கு குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர், சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், சி.பி.ஐ-யும் விசாரணை நடத்தியது. ஆனால் 10 ஆண்டுகள் கடந்த பிறகும் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படாததால் கடந்த 2022-இல் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கில் துப்பு துலங்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை சூப்பிரண்டு மதன், சி.பி.ஐ. அதிகாரி ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழு கடந்த சில வருடங்களாக தீவிர விசாரணை நடத்தி, டெல்டா மாவட்ட ரவுடிகள் உள்பட பலரும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். சந்தேகத்துக்குரிய 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டது. ஆனாலும் வழக்கு கிணற்றில் போட்ட கல்லாக எந்த முன்னேற்றமும் இன்றி உள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி இன்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் இருந்து மாநில காவல்துறைக்கு மாற்ற உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், ராமஜெயம் கொலை வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், கொலை வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இருப்பதாக தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் வாதிட்டார். மேலும் சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்த ஜெயக்குமார் கடலூர் எஸ்.பி. ஆக மாற்றப்பட்டதால் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து, சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்த ஜெயக்குமாருக்கு பதிலாக திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண்குமார், தஞ்சை எஸ்.பி. ஆகியோரை கூடுதலாக நியமித்து புலன் விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதேநேரம், கடந்த 13 ஆண்டுகளைக் கடந்தும் ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் அடையாளம் காணப்படாததால் இந்த வழக்கு எப்போது முடிவுக்கு வரும்? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் மத்தியில் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்