தமிழ்நாட்டில் குறவன் - குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த இரணியன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழ்நாட்டில் 20 லட்சத்துக்கு மேலான குறவர் பழங்குடியினர் சமூக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் திருவிழாக் காலங்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில், குறவன் - குறத்தி எனப் பெயரிட்டு ஆபாச நடனம் ஆடப்படுகிறது. மேலும், இந்த ஆபாச நடனக் காட்சிகளை இணையத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டு இந்த சமூகத்தின் பெயரை இழிவுபடுத்தி வருகின்றனர்.
குறவர் சமூகத்தினர் படித்து அரசு பள்ளி - தனியார் பள்ளிகளில் பணிபுரியும் இந்த காலகட்டத்தில், இந்த சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் குறவன் - குறத்தி என்ற பெயரில் ஆபாசமான ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. மேலும், குறவன் - குறத்தி என்ற பெயரில் நடத்தப்படும் ஆபாச நடனங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சிகள் தொடர்வதால், குறவர் சமூகத்தினர் தீண்டாமைக் கொடுமைக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள்.
மேலும், இணையத்தில், குறவன் - குறத்தி என்று தேடினால் ஆபாச நடனங்கள் வருகிறது. எனவே, இணையத்தில் குறவன் - குறத்தி என்ற பெயரில் உள்ள ஆபாச நடன வீடியோக்களை நீக்கவும் அந்த வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் குறவன் - குறத்தி என்ற தலைப்பில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல் துறையினர் அனுமதி அளிக்கக் கூடாது என்றும் தமிழ்நாட்டில் குறவன் - குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா அமர்வு முன்பு புதன்கிழமை (ஜனவரி 11) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஆடல் பாடல் நிகழ்சிகள் எந்த ஒரு சமூகத்தையும் குறிப்பாக பழங்குடி இன மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
குறவன் - குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் குறவர் சமூக மக்களை பாதிக்கும் விதமாகவோ இழிவுபடுத்தும் விதமாகவோ இருந்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறையினர் சிறப்பு பிரிவு ஏற்படுத்தி குறவன் - குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததைத் தடுக்கவும் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்ற அதற்கான ஆதாரங்கள் வீடியோ பதிவுகள் இருக்கும் பட்சத்தில் அதற்கு காரணமானவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.