மக்களவைத் தேர்தலின் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கை எப்படி சட்டவிரோத வழக்கு என கூறமுடியும் என தமிழக பா.ஜ. அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் தரப்புக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், கேசவ விநாயகத்தை விசாரணைக்கு அழைதால் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.
மக்களவைத் தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 4 கோடி ரூபாய் பணம் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக, பதிவுசெய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆட்கள், 3 கோடியே 98 லட்சத்து 91 ஆயிரத்து 500 ரூபாயை கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தமிழக பா.ஜ.க அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினர்.
இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி கேசவ விநாயகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த விசாரணி சட்டவிரோதமானது. அத்னால், இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.
கேசவ விநாயகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று (ஜூன் 3) விசாரணைக்கு வந்தது. அப்பொது, கேசவ விநாயகம் தரப்பில் “மனுதாரருக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் சட்டவிரோதமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, சட்டவிரோதமாக பதியப்பட்ட வழக்கை புலன் விசாரணை செய்ய முடியாது, சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், “இந்த வழக்கை சட்டவிரோத வழக்கு என எப்படி கூறமுடியும்” என கேசவ விநாயகம் தரப்புக்கு கேள்வி எழுப்பினார். மேலும், போலீசார் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.
இதற்கு பதில் அளித்த கேசவ வினாயகம் தரப்பு வழக்கறிஞர், தேர்தல் தொடர்பான இந்த வழக்கு உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார். இதற்கு, பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. நடைமுறையை பின்பற்றினால் பணம் சென்று விடும் என நீதிபதி குறிப்பிட்டார். மேலும், இந்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி போலீசார் சார்பில் பதில் அளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“