High court ordered to remove all the leaders statues : தமிழகம் முழுவதும் பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் தலைவர்களின் சிலையை மூன்று மாதங்களுக்குள் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே அமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை ஒன்றை அகற்றியது தொடர்பாக தாசில்சார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் வீர ராகவன் தொடுத்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது.
தாசில்தார் விதிமுறைகளை பின்பற்றியே சிலையை தாசில்தார் அகற்றினார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தார் நீதிபதி, மேலும் சாலைகள், பொது இடங்களில் இருக்கும் சிலைகளை பராமரிக்க தலைவர்கள் பூங்கா உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இங்கே, நீக்கப்பட்ட சிலைகளை அங்கே வைத்து, யார் தலைவர்கள் சிலைகளை வைத்தார்களோ அவர்களே அதனை பராமரிக்க வேண்டும் என்றும் நீதிபதி எஸ். எம். சுப்ரமணியம் அறிவித்தார்.
அரசியல் தலைவர்கள் தங்களின் விருப்பப்படி சிலைகளை, விரும்பிய இடங்களில் வைக்கின்றனர் என்று கூறிய நீதிபதிகள் சமுதாயத்திற்காக தியாகம் செய்தவர்கள் எந்த நேரத்திலும் சாதி, மத அடிப்படையில் அடையாளம் காணப்படக் கூடாது என்றனர்.
பொது மக்களின் உரிமைகளை பாதிக்காத வகையில் சிலைகள் அகற்றுவது தொடர்பாக விரிவான விதிகளை தமிழக அரசு வகுக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், நெடுஞ்சாலைகள், அரசு புறம்போக்கு நிலங்களில் சிலைகள் அமைக்க இனி அனுமதி வழங்க கூடாது என்றனர். தமிழகம் முழுவதும் பொது இடங்களில், சாலைகளில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகளை 3 மாதங்களுக்குள் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil