11 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு : மதுரை உயர் நீதிமன்றக் கிளையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தன்னுடைய மகளின் வயிற்றில் வளரும் கருவினை கலைப்பது தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். 11 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை அவருடைய உறவினர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்.
குற்றவாளி போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அந்த சிறுமி 24 வாரம் வயதுடைய சிசுவினை வயிற்றில் சுமந்து வருகிறார். அந்த சிறுமியின் தாயார், தன்னுடைய குழந்தையின் வயிற்றில் வளரும் சிசுவினை கலைக்க வேண்டும் என்று கூறி மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அந்த வழக்கினை நீதிபதிகள் சுப்பைய்யா மற்றும் தரணி ஆகியோர் விசாரணை செய்தனர்.
விசாரணை முடிவில் அந்த கருவினை கலைக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்றம். பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றவாளியின் டி.என்.ஏ மாதிரி, கருவின் டி.என்.ஏவுடன் ஒன்றிப் போகிறதா என்று பரிசோதனை செய்ய, கலைக்கப்பட்ட சிசுவினை பாதுகாப்பாக வைக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருத்துவ அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் படிக்க : போக்ஸோ சட்டம் என்றால் என்ன ?
11 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு : மருத்துவ அறிக்கை
அந்த கருவினை தொடர்ந்து வளர்க்க விரும்பினால் அந்த சிறுமிக்கு இரத்தசோகை, ஹைப்பர் டென்சென், ப்ரீ-டெர்ம் லேபர் பெய்ன் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
அதே போல் 24 வார சிசுவினை கலைப்பதாக இருக்கும் பட்சத்தில் அதிகப்படியான உதிரப் போக்கு, ஹிஸ்டோர்டோமி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு வாய்ப்புகளையும் ஆராய்ந்து, எதன் மூலம் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படும் என்று கேள்வி எழுப்பினார்கள் நீதிபதிகள்.
அந்த சிசுவை தொடர்ந்து வளர்ப்பதில் தான் அதிக சிக்கல்கள் இருப்பதாக மருத்துவத் தரப்பு கூறியது. இதன் மூலம் தாய் மற்றும் சேய் இருவரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த சிறுமியின் பெற்றோர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையென்றால் கருவினைக் கலைக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்றம்.
மருத்துவ கருக்கலைப்பு சட்டம் 1971
மருத்துவ கருக்கலைப்பு சட்டம் 1971ன் படி தாயின் வயிற்றில் வளரும் 20 வாரக் கருவை மட்டுமே கலைக்க அனுமதி உண்டு. ஆனால் இந்த சிசுவின் வயது 24 வாரங்களாகும். ஏற்கனவே உச்ச நீதிமன்றம், ஒரு பெண்ணின் வயிற்றின் வளரும் கரு ஊனமாக வளர்ந்து வருவதை கண்டறிந்த பின்னர் 24 வார சிசுவினை கலைக்க உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பினை வழங்கும் போது நீதிபதிகள் “கனத்த மனதுடன், இப்படி ஒரு தீர்ப்பினை நாங்கள் வழங்குகிறோம், கால தாமதம் இல்லாமல் அந்த கருவினை கலைக்க மருத்துவர்களுக்கு உத்தரவிடுகிறோம். மேலும் அப்பெண்ணின் உடல் நலம் மற்றும் மன நலம் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும்” என்று கூறியிருக்கிறார்கள்.