/tamil-ie/media/media_files/uploads/2021/12/madras-high-court7591.jpg)
மயானங்களில் உள்ள சாதிப் பெயர் பலகைகளை அகற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அனைத்து கிராமங்களிலும், சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மயானங்களை அமைக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மடூர் கிராமத்தில், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த இறந்தவர்களின் உடல்களை ஓடை புறம்போக்கு பகுதியில் அடக்கம் செய்வதால், அருந்ததியர் சமுதாயத்தினருக்காக மயானம் அமைக்க நிரந்தர இடம் ஒதுக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தபோது, அருந்ததியருக்கு மயானம் அமைக்க, தகுதியான நிலத்தை தேர்வு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக, அரசு தரப்பில் கூறப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவான இடத்தை மயானத்திற்காக மடூர் கிராமத்தில் உரிய இடத்தை கண்டறிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் மயானங்களில் உள்ள சாதிப் பெயர் பலகைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மயானங்களை ஒவ்வொரு கிராமத்திலும் அமைக்க வேண்டும் என்றும் நீதிபதி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து குடிமக்களும் இந்த பொது மயானங்களை பயன்படுத்த உரிமையுள்ளது என்றும் தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
விதிகளை மீறி செயல்படுபவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்க வேண்டும் என நீதிபதி அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார். பொது மயானம் வைத்திருக்கும் உள்ளாட்சி அமைப்புகளை ஊக்கத்தொகை மூலம் ஊக்குவிக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் வலியுறுத்தியுள்ளார். சாதி, மத சகிப்புத்தன்மை, பரஸ்பரம் மரியாதை, கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளிட்டவற்றை பாடபுத்தகங்களில் சேர்க்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை நீதிபதி முடித்துவைத்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.