தென் தமிழகத்தில் உள்ள 4 சுங்கச்சாவடிகளைக் கடக்க, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (TNSTC) பேருந்துகளுக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் செய்வாய்க்கிழமை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நிலுவையில் உள்ள ரூ.276 கோடி சுங்கக் கட்டணம் காரணமாக, ஜூலை 10 முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.
நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த இந்த உத்தரவில், "மாநிலப் போக்குவரத்துத் துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) நான்கு சலுகையாளர்களுக்குச் செலுத்த வேண்டிய ரூ.276 கோடி நிலுவைத் தொகையைச் செலுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பொதுப் போக்குவரத்தை சுங்கச்சாவடிகள் வழியாகச் செல்வதைத் தடுக்கும் இந்த தீவிர நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது" என்று குறிப்பிட்டிருந்தார்.
சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க போலீஸ் குவிப்பு
இந்த உத்தரவு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும் என்பதை உணர்ந்த நீதிபதி, கப்பலூர், எட்டூரவட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்சாவடிகளிலும் அசம்பாவிதங்களைத் தடுக்க போதுமான போலீஸ் படையை நிறுத்த வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குநர்/காவல்துறை தலைவர் மற்றும் தெற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி ஆகியோருக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவின் நகலை உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பவும், ஜூலை 15-ம் தேதி நிலைமையை ஆய்வு செய்யவும் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
சலுகையாளர்களின் கோரிக்கை: ரூ.276 கோடி நிலுவை
மதுரை - கன்னியாகுமரி டோல்வே பிரைவேட் லிமிடெட், கன்னியாகுமரி - எட்டூரவட்டம் டோல்வே பிரைவேட் லிமிடெட், சாலைப்புதூர் - மதுரை டோல்வே பிரைவேட் லிமிடெட் மற்றும் நாங்குநேரி - கன்னியாகுமரி டோல்வே பிரைவேட் லிமிடெட் ஆகிய 4 நிறுவனங்கள் கடந்த ஆண்டு தாக்கல் செய்த ரிட் மனுக்களின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், "தமிழக அரசுப் பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தி பயணிகளை ஏற்றிச் சென்றும் சுங்கக் கட்டணத்தைச் செலுத்தாததால், எனது கட்சிக்காரர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் ஃபாஸ்டேக் வசதி இல்லை, விதிகளை மீறி செயல்படுகின்றன. சுங்கச்சாவடி ஊழியர்கள், சுங்கக் கட்டணம் செலுத்தாத பேருந்துகளை நிறுத்த அஞ்சுகிறார்கள், ஏனெனில் அது சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மாறக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது" என்று வாதிட்டார்.
நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தகவல்படி, மாநிலப் போக்குவரத்துக் கழகங்கள் ரூ.8.5 கோடி மட்டுமே செலுத்தியுள்ளன. அசல் தொகையான ரூ.116 கோடியுடன் அபராதம் மற்றும் வட்டியையும் சேர்த்து மொத்தம் ரூ.276 கோடி இன்னும் 4 சலுகையாளர்களுக்குச் செலுத்தப்படாமல் உள்ளது.
நீதிபதி வெங்கடேஷ், "போக்குவரத்துக் கழகங்கள் இந்த விவகாரத்தைத் தீர்க்க விரைந்து செயல்படவில்லை என்றால், இந்தத் தொகை ரூ.300 முதல் ரூ.400 கோடிக்கு மேல் உயரக்கூடும். அரசு அதிகாரிகள் இந்த பிரச்சினையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு விரைவாகச் செயல்பட மாட்டார்கள்; பேருந்துகளை சுங்கச்சாவடிகளில் நிறுத்தும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால்தான் அப்படிச் செய்வார்கள். இந்தக் கழகங்கள் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தி, பொதுமக்களைப் பாதித்துள்ளன" என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டார்.