சைபர் குற்ற வழக்குகள் தொடர்பாக புலன் விசாரணை அமைப்புகள் கேட்கும் விவரங்களை வழங்க மறுப்பது ஏன்? என்பது குறித்து மூன்று வாரங்களில் பதிலளிக்க பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இணையதள குற்றங்கள் அதிகரித்து வருவதால் சைபர் குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில், அனைத்து சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல் கணக்குகளை துவங்க மற்றும் ஏற்கனவே உள்ள சமூக வலைதள கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதாரை கட்டாயமாக இணைக்க உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த ஆண்டனி கிளமெண்ட் ரூபன், உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வெங்கடேசன், சமூக வலைதளங்களுக்கு எதிரான புகார்களை விசாரிக்கும்போது, புலன் விசாரணை அமைப்புகள் கேட்கும் விவரங்களை சமூக வலைதள நிறுவனங்கள் கட்டாயம் வழங்க வேண்டும் என 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விதிகள் வழிவகுக்கிறது என தெரிவித்தார்.
அவ்வாறு வழங்காத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும், வழக்குப் பதிவு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிப்பதற்கும் விதிகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதேபோல, சமூக வலைதளங்களுக்கு எதிராக வரும் புகார்களை விசாரிப்பதற்கு குறை தீர்ப்பாளரை அந்தந்த நிறுவனங்கள் நியமிக்க வேண்டும் என்று விதிகள் உள்ளதாகவும், ஆனால் அதுபோன்று ஒரு நபர் இதுவரை நியமிக்கப்பட்டதாக தெரியவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் சைபர் குற்ற வழக்குகளின் விசாரணைக்கு, விசாரணை அமைப்புகளுக்கு சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் முறையாக ஒத்துழைப்பு அளிப்பது இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் ஆதார் அடையாள அட்டை தொடர்பான வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. மேலும் சமூக வலைதளங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து யூடியூப், பேஸ்புக், வாட்ஸ்ஆப் நிறுவனங்களை இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்த நீதிபதிகள், இந்தியாவில் ஏன் இதுவரை குறைதீர்ப்பாளர்களை நியமிக்கவில்லை?. சமூக வளைதள நிறுவனங்களுக்கான அலுவலகங்கள் ஏன் இந்தியாவில் அமைக்கப்படவில்லை?. புலன் விசாரணை அமைப்புகள் கேட்கும் விவரங்களை தர மறுப்பது ஏன்? என்பது குறித்து விபரங்களை மூன்று வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.