/tamil-ie/media/media_files/uploads/2020/12/madurai-high-court.jpg)
தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், பொது இடங்களில் கட்சிக் கொடிக் கம்பங்கள் அமைக்க இனி அனுமதி தரக்கூடாது என்றும் பட்டா நிலங்களில் கொடிகம்பங்கள் அமைப்பது குறித்து அரசு உரிய விதிகளை உருவாக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சாதி, மத, அரசியல் கட்சிகள் என அனைத்து கொடிக் கம்பங்களையும் 12 வாரத்தில் அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மேலும், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், பொது இடங்களில் கட்சிக் கொடிக் கம்பங்கள் அமைக்க இனி அனுமதி தரக்கூடாது என்றும் பட்டா நிலங்களில் கொடிகம்பங்கள் அமைப்பது குறித்து அரசு உரிய விதிகளை உருவாக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த சித்தன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது: “நான் அ.தி.மு.க. பிரமுகராக உள்ளேன். அ.தி.மு.க-வின் 53-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு மதுரை கூடல் புதூர் பகுதியில் உள்ள எங்கள் கட்சிக்கொடி கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய கொடிக் கம்பம் அமைக்க அனுமதி வழங்குமாறு மாநகராட்சி அதிகாரிளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இதே போல, மதுரை பை-பாஸ் ரோடு பஸ் நிறுத்தம் அருகே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தில் அ.தி.மு.க. கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி கதிரவன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இதுகுறித்து காவல்துறை டி.ஜி.பி. பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு இருந்தது.
மேலும், இந்த வழக்கில் ஆஜரான தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, தமிழகத்தில் கட்சி கொடிக் கம்பங்கள் தொடர்பாக 114 வழக்குகள் பதிவாகியுள்ளன. கொடிக் கம்பங்கள், பிளக்ஸ் பேனர்களை பொறுத்தவரையில் தடையில்லா சான்றிதழ் மட்டுமே வழங்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. மாநகராட்சி அல்லது நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் தடையில்லா சான்றிதழ்கள் பெற்று இந்த கொடிக் கம்பங்கள் வைக்கப்படுகின்றன. கொடிக் கம்பங்கள் அமைப்பதற்கு தற்காலிக நடவடிக்கைகளாகவே இதற்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
இதற்கு நீதிபதி, கட்சி கொடிக்கம்பத்தை நிரந்தரமாக வைப்பதற்கு அனுமதி வழங்குவது யார்? எவ்விதமான வழிகாட்டுதல்களும், விதிகளும் இல்லாத நிலையில், பல அடி உயரத்துக்கு கட்சிக் கொடிக் கம்பங்கள் எதன் அடிப்படையில் நிரந்தரமாக வைக்கப்படுகின்றன? இவ்வாறு வைக்கப்படும் கம்பங்களுக்கு ஏன் வாடகை செலுத்தக் கூடாது?
பொது இடங்களில் தான் கட்சி கொடி கம்பங்கள் நடப்பட வேண்டுமா? அரசியல் கட்சி அலுவலகங்களிலோ, வீடுகளிலோ, பட்டா நிலங்களிலோ கொடிக்கம்பங்களை வைத்துக் கொள்ளலாமே. ஆங்காங்கே கட்சி கொடி கம்பங்கள் நடுவதற்கு தேவைப்படும் இடத்தை கிரையம் செய்து நட்டு வைத்துக் கொள்ளலாமே?” என்று கேள்விகளை எழுப்பினார்.
மேலும், ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் அருகிலும் பல்வேறு கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. பொது இடம் என்பது நம் அனைவருக்கும் சொந்தமானது. இங்கெல்லாம் சிறுநீர் கழிப்பது, கம்பம் நடுவது, பொதுமக்களுக்கு இடையூறாக எதையாவது செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் நீதிபதி கூறி இருந்தார். இதைத் தொடர்ந்து, அனைத்து தரப்பு விசாரணையையும் முடித்த நீதிபதி, தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், இவ்வழக்கில் நீதிபதி இளந்திரையன் தீர்ப்பளித்து உத்தரவு பிறப்பித்தார். அவர் உத்தரவில் கூறியிருந்ததாவது: “பொது இடங்களில் கட்சி, இயக்கம், மதம், சாதி சம்பந்தமான கொடிக்கம்பங்களை நட்டு வைப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது மட்டுமல்லாமல் போக்குவரத்துக்கு இடையூறுகளும், விபத்தும் ஏற்படுவதற்கும் கொடிக்கம்பங்கள் காரணமாக அமைகின்றன. இதனால், பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் உருவாகிறது.
பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு அதிக உயரங்களிலும் கட்சி கொடி கம்பங்களை அமைத்து வருவது ஏற்கத்தக்கதல்ல. இதனை கருத்தில் கொண்டு கொடிக்கம்பங்கள் நடும் விவகாரத்தில் இந்த கோர்ட்டு கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கிறது.
அதாவது, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சி மற்றும் இயக்கங்கள், மத ரீதியான அனைத்து கொடிக்கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றாத பட்சத்தில் அரசே பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கான செலவின தொகைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூல் செய்யவேண்டும்.
மேலும், எதிர் காலங்களில் பொது இடங்களில் கொடிக் கம்பங்கள் அமைப்பதற்கு வருவாய்த்துறையினர் அனுமதிக்க கூடாது. பட்டா இடங்களில் கம்பங்கள் அமைப்பது குறித்து அரசு உரிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும். பொதுக் கூட்டங்கள் மற்றும் தேர்தல் நேரங்களில் கட்சி கொடிக் கம்பங்கள் வைப்பதற்கு உரிய வழிகாட்டுதலை வழங்க அனுமதி வழங்கலாம். அவ்வாறு வழங்கும் பட்சத்தில் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது என்ற உறுதிமொழியையும் வைப்புத் தொகை மற்றும் வாடகை தொகையும் வசூல் செய்திருக்க வேண்டும்.
இந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து அவ்வப்போது அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இந்த உத்தரவை தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உடனடியாக அனுப்ப வேண்டும்.
நீதிமன்ற உத்தரவு முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உறுதிப்படுத்த வேண்டும். தற்பொழுது கொடிக்கம்பங்களுக்கு அனுமதி கோரிய இந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.” என்று நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.