Advertisment

மாதம் ரூ.6,000 சம்பளம் நிர்ணயித்தது எப்படி? மக்களைப் பற்றி யோசிக்க மாட்டீர்கள? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு ரூ.6,000 சம்பளம் நிர்ணயித்தது எப்படி, ஒரு நாளைக்கு ரூ. 200 போதுமா, தற்போதைய விலைவாசியில் மக்களைப் பற்றி யோசிக்க மாட்டீர்களா? இது போன்ற அரசாணைகள் எப்படி பிறப்பிக்கப்படுகிறது என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.

author-image
WebDesk
New Update
Madurai High Court judge verdict in Palani Thirumanjana fee collection issue

ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு ரூ.6,000 சம்பளம் நிர்ணயித்தது எப்படி, ஒரு நாளைக்கு ரூ. 200 போதுமா, இது போன்ற அரசாணைகள் எப்படி பிறப்பிக்கப்படுகிறது என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத இதர பணிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதம் ரூ. 6,000 சம்பளம் என்று தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் இது போதுமானதாக இருக்காது என்று கூறி மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

Advertisment

அந்த மனுவில்,  “தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பிலும், ஒருங்கிணைந்த ஊதியம் நிர்ணயிப்பதிலும் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இதனால், ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு ஊதிய விவகாரம் தொடர்பாக 2010-ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் அல்லாத ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் தூய்மைப் பணியாளர் ஆகியோருக்கு மாத ஊதியம் ரூ.6 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அரசு மாதிரிப் பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு சமமான ஊதியம் வழங்கக்கோரி 2020-ம் ஆண்டில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தனி நீதிபதி  அமர்வில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தொகுப்பூதியத்தில் மனுதாரர் தேர்வாகி உள்ளதால் 2010-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை பொருந்தாது என உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்து எனது பணியை வரன்முறைப்படுத்தவும், உரிய ஊதியம் வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு முன்பு வியாழக்கிழமை (ஜூலை 25) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், “சாதாரண தினக்கூலி பணியாளர்களுக்கு அரசு ரூ.600 ஊதியம் நிர்ணயம் செய்துள்ளது. அப்படியிருக்கும்போது மாதச்சம்பளமாக ரூ.6 ஆயிரம் என எப்படி நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது? தற்போதைய விலைவாசி சூழலில், மக்களை பற்றியெல்லாம் யோசிக்க மாட்டீர்களா? மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளத்தில் எப்படி குடும்பம் நடத்த முடியும்? அப்படியானால், ஒரு நாளைக்கு ரூ.200 போதுமா? இதுபோன்ற அரசாணைகள் எப்படி பிறப்பிக்கப்படுகின்றன? இதுபோன்ற உத்தரவுகளை கூடுதல் கல்வித்துறை செயலாளர் எப்படி பிறப்பிக்கிறார்? கண்ணை மூடிக்கொண்டு அரசாணையில் கையெழுத்திடுவதா” என்று நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

மேலும், அரசு பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத இதர பணிகளை செய்யும் ஊழியர்களுக்கு எப்படி இந்த சம்பளத்தை நிர்ணயித்து கையெழுத்து போட்டிருக்க முடியும். இதுபோன்ற விவகாரங்களில் எல்லாம் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். இது குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்த வழக்கு மீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madurai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment