மக்களின் நலன் கருதி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையை 2 மணி முதல் 8:00 மணி வரை என டாஸ்மாக் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நேரத்தை குறைக்கவும், பள்ளி மாணவர்களுக்கு மதுபான விற்பனை செய்வதை தடுக்க கோரியும் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவில், “தமிழ்நாட்டில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதிக்க வேண்டும். மது விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என குறைக்கவும் மதுபான கடைகள் மற்றும் மது அருந்தும் விடுதிகளில் மது குறித்த ஏற்படும் விளைவுகள் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், விலை பட்டியல்கள் தமிழில் அச்சடிக்க வேண்டும். பள்ளி மாணவ மற்றும் 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறபித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
மதுபானம் வாங்க விற்க உபயோகப்படுத்த உரிமம் உள்வர்களுக்கு மட்டுமே என விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.
மதுபான விடுதிகளில் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்கள் தரமானவையாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
மது விற்பனை விலைப்பட்டியல் மற்றும் மதுவினால் ஏற்படக்கூடிய தீமைகளை குறித்து அனைத்தும் தமிழில் அச்சிட வேண்டும்.
மதுபான கடைகளில் 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்கப்படுவதில்லை என்பதை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
டாஸ்மாக் மதுபான கடை விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதனால், டாஸ்மாக்கில் மது விற்பனை நேரம் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மது விற்பனை செய்யும் நேரம் மாற்றியமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"