விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து, நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், சீமான் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்கவும் உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி, வன்முறையை தூண்டியதாக கஞ்சனூர் காவல் நிலையத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் இன்று (பிப்ரவரி 06) விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை, இறுதி அறிக்கை, சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து, இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் உள்ளதால் வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும். வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க எந்த ஆதாரங்களும் இல்லை எனக் கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து சீமானுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சீமான் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, சீமான் தனிப்பட்ட நபர்களை தூண்டும் விதமாக கருத்துகளை தெரிவித்து வருவதாகவும், இதுபோன்ற கருத்துகளை சீமான் பேசக் கூடாது என அவருக்கு அறிவுரை வழங்கவும் சீமான் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.