ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தனி நீதிபதி விதித்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. தனி நீதிபதி விதித்த தடை உத்தரவை எதிர்த்த மேல் முறையீடு செய்யப்பட்ட மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்படாத ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்களுக்கு காலாவதியான, போலியான மற்றும் தவறான மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக கூறி, ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, ஆன் லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்தும் விதிகளை ஜனவரி 31க்குள் அறிவிக்க வேண்டும் எனவும், அதன் பிறகு மூன்று மாதங்களில் புதிய விதிகளின் படி ஆன்லைனில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் எனவும், அதுவரை ஆன்லைன் மருந்து விற்பனை செய்ய தடை விதித்தும் கடந்த மாதம் 17 ஆம் தேதி உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு ஆன்லைன் மருந்து வணிக நிறுவனங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்தி மத்திய அரசு விதிகள் வகுக்கும் வரை ஆன் லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டது.
மேலும், ஆன்லைன் நிறுவனங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரி 24 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.