scorecardresearch

ஓபிஎஸ் – ஈபிஎஸ் நியமனம் செல்லும் – சென்னை ஐகோர்ட்டு

அதிமுக கட்சி விதிகளின் படி, புதிய பதவிகளை உருவாக்குவதற்கு பொதுக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது. பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு

ஓபிஎஸ் – ஈபிஎஸ் நியமனம் செல்லும் – சென்னை ஐகோர்ட்டு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுக கட்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. முதலில், அதிமுக கட்சித் தொண்டர்கள் சசிகலாவைப் பொதுச்செயலாளராகவும், அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராகவும்  தேர்ந்தெடுத்தனர். ஆனால், அப்போது தான் சசிகலா சிறைக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.

புதிய பொறுப்புகள்
இதைத் தொடர்ந்து, 2017ஆம் ஆண்டில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டு, சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம் ரத்து செய்யப்பட்டது. கட்சியை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் உருவாக்கப்பட்டன. சசிகலா நியமித்த துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதுடன், கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

தேர்தல் ஆணையம் அனுமதி
அ.தி.மு.க வின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்யப்பட்டனர்.  இதேபோன்று, துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோரை நியமித்து அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். இதேபோன்று அக்கட்சியில் இனி பொதுச்செயலாளர் பதவியும் கிடையாது என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நியமன பதவிகளைத் தேர்தல் ஆணையம் ஏற்று அதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.

அதிமுகவின் விதிகளுக்கு முரணானது
ஆனால், இவை அதிமுகவின் விதிகளுக்கு முரணானது என்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது இருந்த விதிகளை பின்பற்ற வேண்டும் என அதிமுக உறுப்பினரும், வழக்கறிஞருமான ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.
அப்போது அவர், “அதிமுக கட்சி விதிகளின் படி, புதிய பதவிகளை உருவாக்குவதற்கு பொதுக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது. பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு” என சுட்டிக் காட்டியிருந்தார். 

ஓபிஎஸ் – ஈபிஎஸ் நியமனம் செல்லும்

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “உட்கட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள், நிர்வாகிகள் குறித்து உள்ளே நுழைந்து ஆராய முடியாது. அவர்களின் பிரதிநிதிகள் அளிக்கும் பிராமண பத்திரத்தை ஏற்றுக்கொண்டு அனுமதி அளிப்பது, அளிக்காதது தேர்தல் ஆணையத்தின் முடிவு, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் நியமனம் பற்றிய தேர்தல் ஆணைய உத்தரவு செல்லும்” என்று கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்தது. 
மேலும்,  உட்கட்சி வழக்கை சிவில் நீதிமன்றத்தில்தான் தொடர முடியும் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: High court says cant cancel ops and eps appointment

Best of Express