நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்தில் பயணிக்க முடியாது: உயர்நீதிமன்றம்

நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை மணிக்கு 100 கிலோ மீட்டர் அதிகரித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு காஞ்சிபுரம் சாலையில் நடந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண் பல் மருத்துவர் ஒருவருக்கு, உடல் உறுப்புகள் 90 சதவீதம் செயலற்றுப் போயின. அவருக்கான இழப்பீட்டுத் தொகையாக 18 லட்சத்து 43 ஆயிரத்து 908 ரூபாயில் இருந்து, 1 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 548 ஆக உயர்த்தி வழங்க நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

மேலும், அந்தத் தீர்ப்பில், “எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்திலும், தேசிய நெடுஞ்சாலைகளில் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்லலாம் என்று மத்திய அரசு 2018ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும். உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், சிறந்த இயந்திர தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட சாலை உள்கட்டமைப்பைக் கருத்தில் கொண்டு மோட்டார் வாகனங்களின் வேக வரம்புகளை ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைகளின்படி பல்வேறு சாலைகளில் வாகனங்களுக்கான அதிகபட்ச வேகம் அமைச்சகம் மூலம் திருத்தப்பட்டது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி.தமிழ்செல்வி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், “சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சாலையில் நடக்கும் இறப்புகளின் எண்ணிக்கை அதிக வேகத்தால் தான் ஏற்படுகின்றன என்பதை எடுத்துரைக்கிறது. சாலை விபத்துகளுக்கு அதிக வேகம் முக்கிய காரணமாக இருந்தபோது சாலை உள்கட்டமைப்பு மற்றும் என்ஜின் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் எவ்வாறு விபத்துகளைக் குறைக்கும் என்பது தெரியவில்லை. உண்மையில் சிறந்த என்ஜின் தொழில்நுட்பம் கட்டுப்பாடற்ற வேகத்திற்கு ஒரு காரணமாக இருப்பதோடு, அதிக விபத்துகளை ஏற்படுத்துவதாக அமைகிறது.

மாநில, மத்திய அரசுகள் வேக வரம்பைக் குறைப்பதோடு பல்வேறு வகையான வாகனங்களுக்கான வேக வரம்புகளை நிர்ணயிக்க வேண்டும். 2018 ஏப்ரல் 6 தேதியிட்ட அறிவிப்பை ரத்து செய்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், 2014ஆம் ஆண்டு அறிவிப்பின்படி, வாகனங்களுக்கு 60 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு அதன் அடிப்படையில் புதிய அறிவிப்பை வெளியிட தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: High court strikes down centre notification on highway speed limit

Next Story
Tamil News Highlights : கோவையில் தனியார் கல்லூரி விடுதியில் 46 மாணவிகளுக்கு கொரோனா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com