ஹெச்.ராஜா, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யப்பபுரத்தில் விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்டபோது போலீஸாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, நீதிமன்றத்தையும் அவமதிக்கும் வகையில் பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
ஒருபக்கம் ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என கோஷம் ஒலிக்க, மற்றொருபக்கம் 'மாணவி சோபியா பேசியது கருத்து சுதந்திரம் என்றால், ஹெச்.ராஜா பேசியதும் கருத்து சுதந்திரம் தான்' என்று அவருக்கு ஆதரவாக ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் போலீஸார் 8 பிரிவுகளில் ஹெச்.ராஜா மீது நேற்று (ஆக.16) வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ் அமர்வில் சில வழக்கறிஞர்கள் எச்.ராஜா குறித்து முறையிட்டனர். ஆனால், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதால் தாமாக முன்வந்து விசாரிக்க தேவையில்லை என நீதிபதிகள் மறுத்தனர்.
நீதிபதி சி.டி.செல்வம் அமர்வு, தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரிப்பதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து, ஹெச்.ராஜா இது தொடர்பாக 4 வாரங்களில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் கருத்து கூறுகையில், "பத்திரிகை செய்தி அடிப்படையில் வழக்குகளை தானாக முன்வந்து எடுக்கக்கூடாது என்றும், சக நீதிபதிகள் அவமானப்படுத்தப்பட்டாலும் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளே அது தொடர்பான வழக்கை விசாரிக்கட்டும் என சில நீதிபதிகள் மறுத்துவிடுவார்கள் அல்லது காத்திருப்பார்கள். ஹெச். ராஜாவின் இந்த வீடியோ உலகம் முழுக்க பரவியது என்றாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்தது என்பதால் மதுரையில் கிளையில் பார்த்துக் கொள்ளட்டும் என சிலர் நினைக்கக்கூடும். காவல்துறை ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளதால், அந்த விசாரணை நல்ல முறையில் முடியும் என காத்திருப்பவர்களும் இருப்பார்கள்.
ஆனால் அரசும், காவல்துறையும் போகிற போக்கில் மறப்போம், மன்னிப்போம் என இந்த விசயத்தை மறந்து விடுவார்கள். ஆனால் நீதி பரிபாலனம் செய்வதில் நீதிபதிகள் தான் அச்சானி என்பதை உணர்ந்து, நீதித்துறையின் கண்ணியத்தை காப்பது நீதிபதிகளின் தலையாய கடமை ஆகும். எனவே கீழமை நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை நீதிமன்ற மாண்பை காக்க வேண்டியதும் அனைவரின் கடமை. ஜனநாயகத்தின் தூணான நீதித்துறையை களங்கப்படுத்த எடுக்கும் முயற்சியை அனுமதிப்பது என்பது பாஸிசத்தையும், நக்ஸலிசத்தையும் வளர்ப்பதாகவே அமையும். அதனால் திருமயம் பகுதியில் ஹெச்.ராஜா பேசிய நீதிமன்றம் குறித்த பேச்சு தொடர்பாக தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கிறோம். இது தொடர்பாக அக்டோபர் 22 ஆம் தேதிக்கு முன்னர் ஹெச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்" என தெரிவித்தனர்.
முன்னதாக, தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்ற போது, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜனை பார்த்து, 'பாஜக பாசிசம் ஒழிக' என்று கோஷமிட்டதால், அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ஹெச்.ராஜா விவகாரத்தில் இன்று விளக்கம் அளித்துள்ள நீதிமன்றம், நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்துவதை அனுமத்தால் பாசிசம் வளர்ந்துவிடும்' என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.