நேரடியாகவும், செல்போன் மூலமாகவும் தனக்கு மிரட்டல் அதிகரித்து வருவதால், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கூறி திருச்சி பா.ஜ.க பிரமுகர் சூர்ய சிவா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை, ட்வைஸ் செய்துள்ளது.
தி.மு.கவில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர் திருச்சி சிவா. இவரது மகன் சூர்ய சிவா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். மேலும் பாஜகவில் இணைந்தது முதல், தலைவர் அண்ணாமலையுடன் நெருக்கமாக இருந்த சூர்ய சிவா, கட்சி பொறுப்பு வழங்குவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக, பாஜகவின் பெண் பிரமுகர் ஒருவரை ஆபாசமாக வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருந்தார்.
இது தொடர்பான ஆடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட சூர்ய சிவா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அதனைத் தொடர்ந்து கட்சிப்பணிகளில் தீவிரம் காட்டி வரும் சூர்ய சிவா, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், எனக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். தமிழக பாஜகவின் மாநில ஓ.பி.சி அணி பொதுச்செயலாளராக இருக்கிறேன். நான் கட்சியில் இணைந்தது முதல் என்னை நேரடியாகவும், செல்போன் மூலமாகவும் பல மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கிறது. மக்கள் சேவைக்காகவும், கட்சிப்பணிக்காவும், மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொள்ளும்போது, சிலர் என்னை பின்தொடர்ந்து வருகின்றனர். அவர்களின் செயல்கள் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இதன் காரணமாக எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் விதமாக குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சூர்ய சிவா மீது, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதனால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடியாது அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடினார்.
இதனைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி தண்டபாணி சூர்ய சிவா மனுவை தள்ளுபடி செய்த நிலையில், மனுதாரர் சூர்ய சிவா யார் என்று நீதிமன்றத்திற்கு நன்றாகவே தெரியும். அவருக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்க முடியும். இப்போதெல்லாம் 2 போலீசாரை பாதுகாப்புக்கு வைத்துக்கொள்வது பேஷனாகிவிட்டது என்று கருத்து தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சூர்ய சிவா தனது மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”