தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கல்வி நிறுவனங்களுக்கு சம்பந்தமில்லாத நபர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது என்றும் உயர்கல்வித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகள், பல்கலைகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உயர்கல்வித்துறை செயலர் சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளார்.
உயர்கல்வித்துறை செயலரின் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகள், பல்கலைகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்களுக்கு சம்பந்தமில்லாத நபர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது. வெளியாட்களின் நடமாட்டம் இருந்தால், உடனே பதிவு செய்ய வேண்டும்.” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், கல்வி நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கல்வி நிலையங்களுக்குள் வந்து செல்லும் வெளிநபர்கள், பணியாளர்கள் குறித்த பதிவு செய்து கட்டாயம் பராமரிக்க வேண்டும் என்றும் வேலை நிமித்தமாக வரக்கூடிய எலக்ட்ரீசியன்கள், பிளம்பர்கள் உள்ளிட்டோரின் விவரங்களை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களுக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கல்வி நிறுவனங்களில் புகார்கள் எழுந்தால் கடுமையான, விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்கல்வித்துறை செயலரின் சுற்றறிக்கையில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வி நிறுவன வளாகத்திற்குள் அதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை உருவாக்குவது கட்டாயமாகும். ஏதேனும் புகார்கள் எழுந்தால், கடுமையான, விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை முறையாக கடைபிடிக்க வேண்டும். காவலன் செயலி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, மாணவர்கள் அதனை பயன்படுத்த செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் குறைபாடுகள் ஏற்பட்டால் ஏற்றுக் கொள்ள முடியாது. துணைவேந்தர்கள், பதிவாளர்கள், டீன்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.