உயர்கல்வி ஏழைகளுக்கு எட்டாக்கனி: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்

மற்ற நாடுகளில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் உயர் கல்வி பெறுகின்றனர். ஆனால் இந்தியாவில் 6 சதவீத பெண்கள் மட்டுமே உயர்கல்வியில் சேர்கின்றனர்

தரமான உயர்கல்வி ஏழைகளுக்கு கிடைப்பது இன்றைக்கும் எட்டாக்கனியாகவே இருப்பதாக சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

’இந்தியாவின் வளர்ச்சிக்கான சவால்கள்’ என்ற தலைப்பில் தனியார் கல்லூரி ஒன்றில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பேசிய துணைவேந்தர் துரைசாமி கல்வி குறித்து மாணவர்களுடன் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். இந்தியாவில் கல்வியின் தரம் குறித்தும், உயர்கல்வி இன்றியமையாமை குறித்து துரைசாமி நிகழ்த்திய உரை அனைவருக்கும் பயன் பெறும் வகையில் இருந்தது.

இதுகுறித்து அவர் பேசுகையில், “இந்தியா உயர் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையிலும், தொழில் நுட்பத்திலும் மிகப் பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. இருப்பினும், தரமான உயர் கல்வி கிடைப்பதில் இந்தியாவிற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. உலக நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் ஒட்டு மொத்த உயர் கல்வி சேர்க்கையில் இந்தியா 26 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளது. அதே போல், உயர் கல்வியில் பாலின இடைவெளி மிகப் பெரிய அளவில் உள்ளது. மற்றொரு அதிர்ச்சி தகவல், ஆண்களை விட பெண்கள் மிகக் குறைவாகவே உயர் கல்வி பெறுகின்றனர். மற்ற நாடுகளில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் உயர் கல்வி பெறுகின்றனர். ஆனால் இந்தியாவில் 6 சதவீத பெண்கள் மட்டுமே உயர்கல்வியில் சேர்க்கின்றனர்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ தரமான உயர்கல்வி ஏழைகளுக்கு கிடைப்பது இன்றைய காலக்கட்டத்திலும், எட்டாக்கனியாகவே இருக்கிறது. இந்தியாவில் உயர் கல்வியில் தனியார் மயம், அதிகளவில் கல்லூரிகள் ஆகியவை உயர்ந்தபோதும், சில தனியார் கல்லூரியில் நிர்ணயிக்கப்படும் கல்விக் கட்டணத்தால் ஏழை மாணவர்கள் சிலரால் உயர்கல்வியை தொடர முடிவதில்லை. குறிப்பாக உயர்கல்வியில் எஸ்சி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 19.9 சதவீதமும், எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 14.2 சதவீதம் மட்டுமே சேர்க்கை விகிதம் உள்ளது. 1980-81 ஆண்டில் பொது மக்களுக்கான அரசின் செலவு 484 கோடியாக இருந்தது. அதன் பின்பு வந்த 2012- 13 நிதியாண்டில் இந்த தொகை மேலும் அதிகரித்து 36, 234 கோடியாக உயர்ந்தது. இருந்தபோதும், உயர்கல்வியில் மாணவருக்கான அரசின் செலவு பெருமளவில் குறைந்துள்ளது” என்று தெரிவித்தார்.

இந்திய நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 4 சதவீதம் மட்டுமே கல்விக்கு செலவிடப்படுகிறது. எனவே, இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் உயர் கல்வி தரமானதாக கிடைக்க, நிதி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க வழி செய்ய வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி கூறி உரையை நிறைவு செய்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close