ஆகஸ்டு மாதத்தில் இருந்து அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால், பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அத்தியாவசிய பொருட்களில் விலையும் உயர்ந்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு :
கடந்த ஜூலை 30ம் தேதி தொடங்கிய பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, இன்று வரை ஓயாமல் உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஜூலை 30 தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 9 காசுகள் உயர்ந்து ரூ.79.20 எனவும், டீசல் 14 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.71.55 எனவும் உயர்ந்தது.
அதை தொடர்ந்து ஆகஸ்டு 13-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசுகளும், டீசல் 5 காசுகளும் குறைந்தது. 14, 15 ஆகிய தேதிகளிலும் அதே விலையில் விற்பனையானது. இதை கண்டித்து பல்வேறு கட்சிகளும், பொதுமக்களும் தங்களின் எதிர்ப்பை கூறினர். இருப்பினும், அதன் பிறகு தொடர்ச்சியாக 12 நாட்களுக்கு பெட்ரோல் விலையும், 10 நாட்களுக்கு டீசல் விலையும் எவ்வித மாற்றமுமின்றி இருந்தது.
அந்த 12 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்வை காணத் தொடங்கியது. அதிகபட்சமாக பெட்ரோல் விலை 51 காசுகளும், டீசல் விலை 56 காசுகளும் உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கத் தொடங்கியது. அன்று தொடங்கி இன்று வரை மக்களை இந்த விலை உயர்வு வாட்டி வதைத்து வருகிறது.
இந்நிலையில், சென்னை விலை நிலவரப்படி இன்று பெட்ரோல் விலை 12 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.85.99 ஆக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 6 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.78.26 ஆக விற்பனையாகிறது.
இந்த விலை உயர்வால் வாகன ஓட்டிகள், லாரி உரிமையாளர்கள் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் லாரிகளின் வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்த வாடகை உயர்வால் பொதுமக்கள் அன்றாடம் வாங்கும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருசில பொருட்கள் விலை உயர்த்தப்படும் என்றும் தகவல்கள் வெளியவரத் தொடங்கியுள்ளது.
தொடந்து உயர்ந்துகொண்டே இருக்கும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வால், பொதுமக்களின் அன்றாட வாழ்வு பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்த உயர்வை உடனே கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.