தமிழக அரசில் பணிபுரியும் யோகா மற்றும் இயற்கை நல மருத்துவர்களை ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள் என்று கூறிய மத்திய ஆயுஷ் அமைச்சக்கத்தின் செயலர் ராஜேஷ் கோட்சேவுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசில் பணிபுரிந்து வரும் யோகா மற்றும் இயற்கை நல மருத்துவர்கள் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டபோது, இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள், கேள்வி கேட்டால் தலைமை செயலாளர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ஆயுஷ் அமைச்சக்கத்தின் செயலர் ராஜேஷ் கொடேச்சாகூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆயுஷ் செயலாளர் கொடேச்சா தமிழக மருத்துவர்களை இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள் என்று கூறியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக இயற்கை மருத்துவர்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட @moayush செயலாளர் @vaidyakotecha மீது நடவடிக்கை தேவை!
பா.ஜ.க. அரசின் #HindiImposition எண்ணத்தை வெளிப்படுத்தும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாது என்பதை @PMOIndia உறுதி செய்திடுக!@CMOTamilNadu அழுத்தம் தந்திடுக! pic.twitter.com/9zoAEvnVNf
— M.K.Stalin (@mkstalin) August 22, 2020
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, “யோகா மற்று இயற்கை மருத்துவர்களுக்காக நடைபெற்ற ஆன்லைன் பயிற்சியில், இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள் என்று ஆயுஷ் செயலாளர் ராஜேஷ் கோட்சே மொழி வெறியுடன் மிரட்டல் விடுத்திருக்கிறார். மத்திய அரசின் செயலாளரே அநாகரிகமாகவும் பண்பாடற்ற முறையிலும் மொழி வெறியுடன் பேயாட்டம் போட்டிருப்பது வெட்கக்கேடானது. ஆங்கிலத்தில் பயிற்சி கொடுங்கள் என்று கூறிய தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் மீது எரிந்து விழுந்து அவர்களின் பெயர்களையும் கேட்டு அச்சுறுத்தியிருக்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்று கனிமொழியிடம் பேசிய அதிகாரி மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் - ராஜேஷ் கொடேச்சா இப்படி மொழி வெறி பிடித்துப் பேசியிருக்க மாட்டார்.
அதிகாரிகளப் பேச அனுமதித்து மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது - ‘அதிகாரிகளை வைத்து இந்தியை திணிப்பதுதான் எங்களின் திட்டம்’ என்ற பாஜக அரசின் எண்ணத்தை வெளிப்படுத்துகிறது.
பிரதமர் நரேந்திர மோடி மருத்துவர்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுத்து இனி இப்படி ஒரு நிகழ்வு எங்கும் நேர்ந்துவிடாமல் உறுதி செய்திட வேண்டும்.
தமிழகத்திலிருந்து பங்கேற்போரை அவமதிக்கும் தரக்குறைவான போக்கு கைவிடப்படவேண்டும் என்றும் - அது போன்ற பயிற்சிகள், கூட்டங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் நடைபெற வேண்டும் என்றும் பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆயுஷ் செயலாளர் தமிழக மருத்துவர்களை இந்தி தெரியாவில்லை எனில் வெளியேறுங்கள் என்று கூறியது தொடர்பாக மத்திய அரசுக்கு திமுக எம்.பி கனிமொழி கடிதம் எழுதியுள்ளர்.
My letter to the Honorable Union Minister @shripadynaik on the reported hindi imposition.#StopHindiImposition pic.twitter.com/Wzlib2f9fl
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 22, 2020
கனிமொழி எம்.பி மத்திய மாநிலங்கள் அமைச்சர் ஸ்ரீபத் யெஸ்ஸோ நாய்க்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில், “மத்திய ஆயுஷ் அமைச்சகம் நடத்திய ஆன்லைன் பயிற்சி நிகழ்வில் இந்தி திணிப்பது பற்றி உங்களுடைய கவனத்திற்கு நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். இந்த நிகழ்வில் மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் இந்தி பேசாத பங்கேற்பாளர்கள் வெளியேறுங்கள் என்று கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சி பற்றி பல்வேறு செய்தித்தாள்களிலும் சமூக ஊடகங்களிலும் செய்தி வெளியாகி உள்ளது.
அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் 22 மொழிகளும் அலுவலக மொழிகள் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியும் ஆங்கிலமும் அலுவலக மொழி என்பது நீங்கள் அறிவீர்கள். மக்களவையில் வாக்கெடுப்பின்போது, இந்தி பேசாத மாநிலங்கள் ஆங்கிலம் துணை மொழியாக இருக்க வேண்டும் என்று கோரியபோது 1959ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆங்கிலம் காலவரையறையின்றி தொடரும் என்று அளித்த வாக்குறுதியை நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அதனால், நான் இந்த நிகழ்ச்சி பற்றி உடனடியாக விசாரணை நடத்தவும் மொழிகளின் அடிப்படையில், நம்முடைய குடிமக்களி அவமதித்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். மேலும், அனைத்து நிகழ்ச்சிகளையும் ஆங்கிலத்தில் நடத்த வேண்டும் என்றும் இந்தி பயன்படுத்தப்பட்டால், அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஆயுஷ் பயிற்சியில் இந்தியை திணித்து தமிழக மருத்துவர்களை அவமதிப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதால், ஆயுஷ் அமைச்சக செயலாளர் கொடேச்சாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான இணையவழி புத்தாக்க பயிற்சி முகாமில் இந்தியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டது மட்டுமின்றி, அதைத் தட்டிக் கேட்ட தமிழக மருத்துவர்களை மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்ய ராஜேஷ் கொடேச்சா அவமதித்துள்ளார்; மிரட்டியுள்ளார். அதிகார மமதையிலான இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
இந்தியாவின் அனைத்து மாநில அரசுத்துறைகளிலும் பணியாற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான 3 நாட்கள் இணையவழி புத்தாக்க பயிற்சி முகாமை மத்திய ஆயுஷ் அமைச்சகம் நடத்தியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மருத்துவர்கள் உள்ளிட்ட சுமார் 400 மருத்துவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர். தொடக்கத்திலிருந்தே பயிற்சியாளர்கள் இந்தி மொழியில் மட்டுமே வகுப்புகளை நடத்தினார்கள். இந்தியில் வகுப்புகளை நடத்துவது தங்களுக்கு புரியவில்லை என்பதால் ஆங்கிலத்தில் நடத்தும்படி தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆயுஷ் அமைச்சகத்துக்கு இணையவழியில் தகவல் அனுப்பினர். ஆனால், அவற்றுக்கு எந்த பயனும் இல்லை. மூன்றாவது நாள் வகுப்பை அமைச்சகத்தின் செயலாளர் வைத்ய ராஜேஷ் கொடேச்சா நடத்தியுள்ளார். அவரும் முழுக்க முழுக்க இந்தி மொழியிலேயே வகுப்பை நடத்தியுள்ளார். ஆங்கிலத்தில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அவர் ஏற்கவில்லை.
அதுமட்டுமின்றி, தமக்கு சரளமாக ஆங்கில பேச வராது என்றும், அதனால் இந்தியில் மட்டும் தான் வகுப்பு நடத்த முடியும் என்றும் கூறியுள்ளார். இந்தி புரியாதவர்கள் வகுப்புகளை விட்டு வெளியேறலாம் என்று செருக்குடன் கூறியுள்ளார். தமிழக மருத்துவர்கள் மீண்டும் ஒரு முறை கோரிக்கை விடுத்த போது, ஆத்திரமடைந்த கொடேச்சா,‘‘எவருக்கேனும் இந்தி புரியவில்லை என்றால், அவர்களுக்கு நாம் புரியவைக்க வேண்டும். இந்தி புரியாதவர்கள் தொடர்ந்து பிரச்சினை செய்தால் அவர்கள் மீது தமிழக அரசின் தலைமைச்செயலாளர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று மிரட்டியுள்ளார். அதை உறுதி செய்யும் வகையில் ஆயுஷ் அமைச்சக ஆலோசகரான பாலு மோடே என்பவர் தமிழகத்திலிருந்து பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஆங்கிலத்தில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று கேட்டவர்களைப் பற்றி விசாரித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதே கொடுமை ஆந்திரம், தெலுங்கானம், கேரளம் ஆகிய மாநில மருத்துவர்களுக்கும் நடந்துள்ளது.
மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளரின் நடவடிக்கைகள் அதிகார அத்துமீறலின் உச்சக்கட்டமாகும். மத்திய அரசில் பதவி வகிப்பவர்கள் அவர்களுக்கு தெரிந்த இந்தி மொழியில் மட்டும் தான் வகுப்புகளை நடத்துவார்கள்; அந்த மொழி தெரியாதவர்கள் அதை எதிர்த்து கேள்வி கூட கேட்கக் கூடாது என்பது ஆதிக்க மனநிலை ஆகும். இந்தி பேசுபவர்கள் தான் இந்தியாவின் எஜமானர்கள் போலவும், இந்தி தெரியாத தமிழ் உள்ளிட்ட தென்மாநில மொழிகளைப் பேசுபவர்கள் கொத்தடிமைகள் போலவும் மத்திய அரசின் உயர்பதவிகளில் இருப்பவர்கள் நினைத்துக் கொள்வது ஆபத்தானது; ஜனநாயகப் பண்பற்றது.
இந்தியாவின் அலுவல் மொழி இந்தியாக இருந்தாலும் கூட ஆங்கிலம் தான் இணைப்பு மொழி ஆகும். இந்தி பேசாத மாநிலங்களுடனான தகவல் தொடர்புக்கு ஆங்கிலம் தான் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், தலைமைச் செயலாளர் நிலையிலான மத்திய அரசின் செயலாளர் நிலையில் உள்ள அதிகாரி ஒருவர் தமக்கு ஆங்கிலம் தெரியவில்லை; அதனால் இந்தியில் தான் பேசுவேன் என்று கூறியது அவரது ஆணவத்தை மட்டுமல்ல.... அவர் அந்த பதவியில் நீடிக்க தகுதியற்றவர் என்பதையும் வெளிப்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி, ஆங்கிலத்தில் வகுப்பு நடத்தும்படி கோரியதற்காக மாநில அரசு பணியில் உள்ள மருத்துவர்களை மிரட்டுவதும், அவர்களைப் பற்றி விசாரிப்பதும் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
ஆயுஷ் அமைச்சக செயலாளர் பதவியில் ஆங்கிலம் தெரியாத கொடேச்சாவுக்கு பதில், ஆங்கிலம் பேசத் தெரியாத தமிழ் அதிகாரி ஒருவர் இருந்து, தம்மால் தமிழில் மட்டும் தான் பாடம் நடத்த முடியும் என்று கூறியிருந்தால், அதற்கு இந்தி பேசும் மாநில அரசுகளிடமிருந்து எத்தகைய எதிர்வினைகள் வந்திருக்கும்? அந்த அதிகாரியின் நிலைமை என்னவாகியிருக்கும்? என்பதை சிந்தித்துப் பாருங்கள். ஒரு நாட்டிற்குள் இருந்தாலும் இந்திக்கும், தமிழுக்கும் இந்த அளவுகளில் தான் மரியாதை கிடைக்கிறது. இந்த நிலை மாற வேண்டுமானால், தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும்.
ஆயுஷ் பயிற்சி முகாமில் இந்தியை திணித்து, தமிழக மருத்துவர்களை அவமானப்படுத்தி, மிரட்டிய மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் கொடேச்சாவுக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுத வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.