இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அண்மையில் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் அஸ்வின் மாணவர்கள் மத்தியில் உற்சாகமாக பேசினார். அப்போது, மாணவர்களிடம் உங்களில் தமிழை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் யார்? என்று கேட்டார். அதற்கு மாணவர்கள் உற்சாகமாக சத்தம் எழுப்பி, தங்கள் தாய்மொழி தமிழ் என்று தெரிவித்தனர். தொடர்ந்து இந்தி மொழி மாணவர்கள் யாராவது இருக்கிறீர்களா? என்று அஸ்வின் கேட்டபோது அங்கு எந்த சத்தமும் கேட்கவில்லை
இதையடுத்து அஸ்வின், "சத்தம் வரவில்லையே, இந்தி நமது தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி தான் என்று சொல்லலாம் என்று நினைத்தேன்" என்றார். இதைக் கேட்டு மாணவர்கள் மீண்டும் ஆரவாரத்துடன் சத்தம் எழுப்பினர்.
இந்நிலையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அஸ்வின் கூறியது சரி தான். நானும் அதையே சொல்கிறேன். இந்தி நமது தேசிய மொழி அல்ல. அது ஒரு இணைப்பு மொழி. நமது வசதிக்கேற்ப பயன்படுத்தப்படும் மொழி என்று கூறினார்.