சென்னை கோட்டை ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் இருந்த இந்தி வார்த்தைகள் அடையாளம் தெரியாத நபர்களால் அழிக்கப்பட்டது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கோட்டை புறநகர் ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும். இந்த நிலையில் இதில் இந்தியில் எழுதப்பட்டிருந்த பெயர்கள் மட்டும் அடையாளம் தெரியாத நபர்களால் கருப்பு மையால் அழிக்கப்பட்டிருந்தது. சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே உள்ள வழித்தடத்தின் 5-வது நடைமேடையில் இருந்த பெயர் பலகையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதையறிந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலகையை அப்புறப்படுத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில் ரயில் நிலையத்தில் சி.சி.டி.வி கேமரா இல்லாததால் குற்றம் புரிந்தவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் ‘தஹி’ என்ற இந்தி வார்த்தையை அச்சிடவேண்டும் எனக் கூறியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“